ஹர்பஜன் தனது தவறை உணர்ந்து திருந்தி விட்டார்: சைமண்ட்ஸ்
மெல்போர்ன்: சிட்னி டெஸ்ட் சம்பவத்திற்குப் பின்னர் தனது தவறை ஹர்பஜன் சிங் உணர்ந்து திருந்தி விட்டார். நிறையவே மாறியுள்ளார் என்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் புதிய பொழுதுபோக்காக இந்திய வீரர்களை வம்பிழுப்பது தொடங்கியுள்ளது. முதலில் கில்கிறைஸ்ட், சச்சின் டெண்டுல்கரை பொய்யர் என்று கூறினார். பின்னர் ரிக்கி பான்டிங்கும் வம்பிழுத்துப் பேசினார். இப்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சிட்னி டெஸ்ட் சம்பவத்திற்குப் பின்னர் ஹர்பஜன் சிங் திருந்து விட்டதாக கூறியுள்ளார்.
சைமண்ட்ஸும் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 'Roy on the rise - A yearn of living dangerously' என்பது அந்த நூலின் பெயர்.
அதில், சிட்னி டெஸ்ட் போட்டியில், தனக்கும், ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த மோதலை விவரித்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தற்போது ஹர்பஜன் சிங் நிறைய மாறி விட்டதாக கூறியுள்ளார் சைமண்ட்ஸ்.
சைமண்ட்ஸ் தனது நூலில் கூறியிருப்பதாவது ...
சிட்னி சம்பவத்திற்குப் பின்னர் ஹர்பஜன் சிங் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தனது தவறை உணர்ந்து விட்டார். நிறையவே மாறியிருக்கிறார். தான் எல்லை தாண்டி விட்டதை அவர் புரிந்துகொண்டுள்ளார்.
அன்று நடந்தது என்னவென்றால், தேனீர் இடைவேளைக்குப் பிறகு, ஹர்பஜன் 50 ரன்களில் இருந்தார். பிரெட் லீ பந்தில் ஒரு ரன் எடுத்து விட்டு ஓடினார். அப்போது பிரெட் லீயின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
உடனே நான் ஹர்பஜன் சிங் அருகில் சென்று, சில ரன்கள் எடுத்து விட்டதால், சந்தோஷப்பட வேண்டாம், பந்து வீச்சு குறித்து கவலை தெரிவிக்க வேண்டாம் என்றேன்.
எனது பேச்சை அவர் பாராட்டவில்லை. மாறாக திட்டினார். பதிலுக்கு நானும் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டேன். பின்னர் இருவரும் அவரவர் இடங்களுக்குப் போய் விட்டோம். அப்போது என்னைக் கூப்பிட்ட ஹர்பஜன், குரங்கு என்று பொருள்படும்படியான வார்த்தையைப் பிரயோகித்தார். ஒருமுறை அல்ல, இரு முறை அவ்வாறு கூறினார் என்று கூறியுள்ளார் சைமண்ட்ஸ்.


Click it and Unblock the Notifications