
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என சமன் ஆனது.
இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 30) நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இப்போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தின் கேலரிகளுக்கு ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்படும் 18 வழிகளிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்யப்படும்.
இதுதவிர ரசிகர்களை கண்காணிக்க மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் 218 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ரசிகர்கள் வெளியில் இருந்து பேனர்கள், சிகரெட்டுகள், லைட்டர்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.