இந்தியாவை வீழ்த்திய 13 பேர்!!

சிட்னி: சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை ஆஸ்திரேலிய அணியின் 11 வீரர்களும், அவர்களுக்குத் துணையாக 2 நடுவர்களும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தால் கிரிக்கெட் உலகமே பரபரப்பாகி காணப்படுகிறது.
இந்தியாவை ஆஸ்திரேலியாவின் 11 வீரர்களுடன் சேர்ந்து, ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகிய இரு நடுவர்களும் வீழ்த்திய விதம் இதோ ..
நாள் 1 - ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ். கங்குலி வீசிய பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் அடித்தார். பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் டோணியின் கைகளுக்குள் அழகாக தஞ்சம் புகுந்தது. ஆனால் நடுவர் மார்க் பென்சன் அவுட் சொல்லாமல், மயான அமைதி காத்தார். தொடர்ந்து ஆடிய பான்டிங் 55 ரன்களைச் சேர்த்தார்.
- இஷாந்த் சர்மா வீசிய பந்தை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அடித்தார். க்ரீஸை விட்டு அவர் வெளியேற டோணி, மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்ட் செய்தார். இந்திய அணியினர் அவுட் கோர, நடுவர் ஸ்டீவ் பக்னர், வாயை மூடி, சிரித்தபடி அமைதி காத்து இந்திய வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது 30 ரன்களில் இருந்த சைமண்ட்ஸ் பக்னர் உதவியால் தொடர்ந்து விளையாடி 162 ரன்களைக் குவித்தார்.
- போட்டியின் 3வது நடுவர் ஆக்ஸன்போர்டிடம் அப்பீல் போனது. ஆனால் சந்தேகமாக இருப்பதாகவும், அதன் பலனை சைமண்ட்ஸுக்குக் கொடுப்பதாகவும் அவர் தீர்ப்பளித்தார். இத்தனைக்கும் 3வது நடுவர் என்பவர் டிவி ரீப்ளேயைப் பார்த்து தீர்ப்பு சொல்பவர். டிவி ரீப்ளேயில் சைமண்ட்ஸ் அவுட் ஆவது அழகாக தெரிந்தும் கூட, அது ஆக்ஸன்போர்டு கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது மாபெரும் மாயாஜாலம்தான்!
நாள் 2 - மறுபடியும் சைமண்ட்ஸ் அவுட் ஆனார். கும்ப்ளே வீசிய பந்தை அடிக்க கிரீஸை விட்டு இறங்கி வந்தார் சைமண்ட்ஸ். அப்போது டோணி அழகாக ஸ்டம்ப்ட் செய்தார். ஆனால் நடுவர் பக்னர் வழக்கம்போல கப்சிப். அப்போது சைமண்ட்ஸின் ஸ்கோர் 148 ஆக இருந்தது.
- ஆஸி வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ வேகமாக பந்து வீசினார். ஆனால் க்ரீஸை விட்டு வெளியே வந்து வீசினார். இதை நோ பால் என்று நடுவர் பக்னர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் சொல்லவில்லை. அந்தப் பந்தில் வாசம் ஜாபர் ஆட்டமிழந்தார்.
நாள் 4 - ஆர்.பி. சிங் வீசிய பந்தில் கேட்ச் ஆனார் ஹூஸே. ஆனால் அதை நடுவர் பென்சன் இல்லை என்று கூறி விட்டார். அப்போது ஹூஸே எடுத்திருந்த ரன்கள் 45. ஹூஸே அவுட் ஆனது டிவி ரீப்ளேயில் மிகத் தெளிவாக தெரிந்தது.
நாள் 5 - சைமண்ட்ஸ் வீசிய பந்தை அடிக்க முயலுகிறார் டிராவிட். பந்து பேட்டில் படாமல் கேட்ச் ஆகிறது. இருந்தாலும் டிராவிட் அவுட் என்று கூறி மீண்டும் தவறு செய்தார் பக்னர். அப்போது டிராவிடின் ஸ்கோர் 38.
- கங்குலி அடித்த பந்தைப் பிடிக்கிறார் மைக்கேல் கிளார்க். ஆனால் பந்து கங்குலியின் பேட்டிலேயே படவில்லை. இருந்தாலும் நடுவர் பென்சன், ஆஸ்திரேலிய கேப்டன் பான்ட்டிங்கிடம் ஆலோசனை கேட்டு அவர் சொன்னதால், அவுட் என்று கூறி கங்குலியை வெளியேற்றுகிறார். அப்போது கங்குலியின் ஸ்கோர் 51.
இப்படி முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இரு நடுவர்களும் மாறி மாறி இந்தியாவுக்கு ஆப்படித்து, கடைசி வரை இந்தியாவை விளையாட விடவே இல்லை.
முதல் இன்னிங்ஸில் பக்னரும், பென்சனும் தவறு செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா வென்றிருக்கும். காரணம் இந்தியப் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் நல்ல பார்மில் இருந்தனர். அதேபோல 2வது இன்னிங்ஸில் தவறு செய்யாமல் இருந்திருந்தால் போட்டி டிராவில் முடிந்திருக்கும்.
ஆனால் இந்த இரண்டில் எது நடந்தாலும் அது ஆஸ்திரேலியாவைப் பாதிக்குமே என்ற பதைபதைப்பில் இரு நடுவர்களும் நடந்து கொண்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது பக்னர், பென்சனின் செயல்பாடுகள்.
சிட்னி டெஸ்ட் மூலம் தெரிய வரும் ஒரே விஷயம், தங்களை விட யாரும் சிறப்பாக விளையாடி விடக் கூடாது, அப்படியே விளையாட முயற்சித்தாலும் அதை அனுமதிக்கக் கூடாது என்ற ஆஸ்திரேலிய எண்ணமே மேலோங்கித் தெரிகிறது.
சிட்னி டெஸ்ட்டில் வி.வி.எஸ்.லட்சுமண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் போட்ட அபார சதங்கள் ஆஸ்திரேலியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுகிறது.
அதேபோல கும்ப்ளே, உள்ளிட்டோரின் பந்து வீச்சும் அபாரமாக இருந்ததும் அவர்களை கோபப்படுத்தி விட்டது.
குறிப்பாக ஹர்பஜன் சிங், பிரெட் லீ பந்துகளை சிதறடித்து அரை சதத்தைக் கடந்த போது ஆஸ்திரேலிய வீர்ரகளால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஹர்பஜன் அரை சதத்தைப் போட்ட பிறகுதான் சைமண்ட்ஸ் வெடித்தார். அவர்தான் முதலில் ஹர்பஜனுடன் சண்டைக்குப் போனதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்பஜன் அடித்து நொறுக்கியதால் அப்செட் ஆன லீக்கு தெம்பூட்டும் வகையில்தான் ஹர்பஜனை சீண்டினார் சைமண்ட்ஸ் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில் சிட்னி போட்டியில் நடந்த நிகழ்வுகள், நடுவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இந்திய அணியை குறி வைத்து நடந்தவையாகத்தான் தோன்றுகின்றன.
முன்பு முரளீதரனை குறி வைத்து மிக அநாகரீகமாக நடந்து கொண்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆனால் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் பெயர் போன இந்தியர்களைப் பார்த்து, இந்திய வீரர்களைப் பார்த்து இனவெறி புகாரைக் கூறி பிரச்சினைகளை திசை திருப்பப் பார்த்துள்ளனர்.
சிட்னியில் நடந்தது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications