ஐபிஎல் போட்டியிலேயே நான் காயமடைந்திருந்தேன் - ஷேவாக் திடீர் ஒப்புதல்
டெல்லி: பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஷேவாக் - டோணி மோதல் விவகாரத்தில், திடீர் திருப்பமாக, ஐபிஎல் தொடரின்போதே தான் காயமடைந்ததாக கூறியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.
அப்போதே காயமடைந்திருந்தேன் என்று இப்போது கூறும் ஷேவாக், உலக கோப்பை டுவென்டி 20 தொடரில் ஏன் பங்கேற்றார் என்பது புரியாத புதிராக உள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் பங்கேற்ற ஷேவாக் இந்தியா பங்கேற்ற முதலாவது போட்டியில் விளையாடவில்லை.
அப்போது ஷேவாக்குக்கும், டோணிக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ரோஹித் சர்மாவை டோணி ஆதரிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை டோணியும், இந்திய அணியும் மறுத்தனர்.
ஆனால் தற்போது ஷேவாக் போட்டித் தொடரிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் நீக்கப்படுவதாக காரணம் கூறப்பட்டாலும், டோணிக்கும், அவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதே பிரதானமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரிலேயே காயமடைந்ததாக ஷேவாக் இப்போது திடீரென கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் தொடரின்போது, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின்போது தான் காயமடைந்ததாக கூறியுள்ளார் ஷேவாக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தப் போட்டியின்போது ஒரு பந்தை நிறுத்துவதற்காக தாவியபோது காயமடைந்தேன்.
எனது காயம் குறித்து எனக்கு முழுமையாக தெரியவில்லை. மருத்து நிபுணருடன் ஆலோசிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் ஷேவாக்.
ஷேவாக்கின் தோள்பட்டையில் கிரேடு-1 காயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
ஆனால், ஷேவாக் சார்ந்த டெல்லி அணியின் மேனேஜரான டி.ஏ.சேகர் வேறு விதமாக கூறுகிறார்.
ஷேவாக்குக்கு முன்பு வெறும் விரல் காயம்தான் ஏற்பட்டுள்ளது. அதுவும் கூட பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட காயம்தான். அது கூட குணமாகி விட்ட நிலையில்தான் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்தார். ஆனால் ஐபிஎல் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என்கிறார் சேகர்.
சேகரின் கூற்று ஷேவாக் குழப்பத்தை மேலும் அதிகமாக்குவதாக உள்ளது.
அப்படியே ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்ததாக ஷேவாக் கூறுவது உண்மையாக இருந்தாலும் கூட, அவராகவே உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியிருக்கலாம். ஏன் விலக வில்லை என்று தெரியவில்லை.
அப்படி அவர் விலகாததால்தான் டோணி, ஷேவாக் மீது கோபமாக இருந்தாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
எந்தக் 'காயத்தை' மறைக்க இந்தக் காயத்தைக் காரணமாக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு வேளை, டோணி, ஷேவாக் இடையிலான மோதல் பெரிதாகி விடாமல் தடுக்கும் பொருட்டு, ஷேவாக்கை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஷேவாக் காயமடைந்தார் என்ற வாதம் ஒருபக்கம் இருந்தாலும், அவருக்கும் டோணிக்கும் இடையிலான பனிப் போர் பெரிதாகி விட்டதாகவே கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications