இலங்கைக்கு எதிரான டெஸ்ட்-மீண்டும் ஜாகீர்-ஸ்ரீசாந்த்
மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிடும் அணியில் இடம் பெறுகிறார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்திய-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வாரளர்கள் டெஸ்ட் அணியை அறிவித்தனர்.
இதில், காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த ஜாகிர் கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனது பந்து வீச்சை விட கோபம் மற்றும் கோணங்கித்தணங்களால் பிரபலமான ஸ்ரீசாந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இவரது சேர்க்கைதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த ஸ்ரீசாந்த், உள்ளூர்ப் போட்டிகள் எதிலும் சரியாக விளையாடவேயில்லை. இந்த நிலையில் அவரை மறுபடியும் அணியில் சேர்த்துள்ளனர்.
கடைசியாக 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிதான் ஸ்ரீசாந்த் கடைசியாக ஆடிய போட்டி. அதன் பின்னர் அவர் விளையாடவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோரும் அணியில் இடம் பெற்றனர்.
ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல் பரிசீலிக்கப்படவில்லை.
இந்திய அணி விவரம்
டோணி (கேப்டன்), ஷேவாக், சச்சின், கம்பீர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமண், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, முரளி விஜய், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த், பத்ரிநாத்.


Click it and Unblock the Notifications