5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸியை வீழ்த்தியது இந்தியா

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று மெல்போர்னில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் கில்கிறைஸ்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ஸ்ரீசாந்த் பந்தில் அவுட் ஆனார்.
மறு முனையில் மாத்யூ ஹைடன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்த அவரை இஷாந்த் சதர்மா அவுட் ஆக்கி அனுப்பினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் ரிக்கி பான்டிங் மீண்டும் சொதப்பலாக ஆடி 9 ரன்களில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆனார்.
தொடர்ந்து மைக்கேல் கிளார்க் 11 ரன்களிலும், சைமண்ட்ஸ் 14 ரன்களிலும் வீழ்ந்தனர். இந்தியாவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். அதேசமயம், சுழற்பந்து வீச்சில்தான் அவர்களுக்கு ஓரளவு ரன்கள் கிடைத்தது.
மைக்கேல் ஹூசே மட்டும் சற்றே நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 65 ரன்களைச் சேர்த்தார். இதற்கு அவருக்கு தேவைப்பட்ட பந்துகள் 88.
ஹாடின் 5, பிரெட் லீ 10, ஜான்சன் 3, பிரேக்கன் 1 என ஆஸ்திரேலிய வீரர்கள் சரிந்து 43.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ரன்களில் சுருண்டனர்.
இஷாந்த் அபாரம்:
இந்தியாவின் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஸ்ரீசாந்த்துக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. இர்பான் பதான் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.
ஹர்பஜன் சிங் 1 விக்கெட்டை மட்டும் எடுத்தாலும் 8 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்களே விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார்.
இதையடுத்து வெற்றிக்கு 160 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவக், சச்சின் டெண்டுல்கர் இறங்கினர். ஷேவக் 11 ரன்கள் எடுத்திருந்தபோது பிரேக்கன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மறு முனையில் சச்சின் தாக்குப் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிர் முனையில் வந்தவர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா - சச்சின் இணைந்து பொறுமையுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது சச்சின் 54 பந்துகளில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் டோணி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
இறுதியில் இந்திய அணி 45.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 39 ரன்களுடனும், டோணி 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் மிச்சல் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், பிரேக்கன், பிரட் லீ, கிளார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இத்தொடரில் இந்தியா அதிக புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 3 போட்டிகளில் ஆடியுள்ள இந்தியா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் ஆடி 7 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications