கிரிக்கெட்: இந்தியாவிடம் இங்கிலாந்து படுதோல்வி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அபாரமாக வென்ற தெம்புடன், இன்று இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டித் தொடரை தொடங்கியுள்ளது இந்தியா.
முதல் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து கெவின் பீட்டர்சன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.
தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சை பிரித்து மேய்ந்தனர். கம்பீரும், ஷேவாக்கும் சேர்ந்து ரன்களை குவித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 127 ரன்களைக் குவித்தனர். இதனால் இந்தியாவுக்கு சிறப்பான அடித்தளம் கிடைத்தது.
ஷேவாக் 85 ரன்கள் எடுத்தார். கம்பீர் 51 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் எடுத்தார். ஆனால் யுவராஜ் சிங்தான் ரசிகர்களை அதீத குஷிப்படுத்தியவர்.
வெறும் 78 பந்துகளையே சந்தித்த அவர் 138 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்சர்களும், 16 பவுண்டரிகளும் அடக்கம்.
கேப்டன் டோணி தன் பங்குக்கு 39 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்களை மட்டும் இழந்து 387 ரன்களைக் குவித்தது.
இமாலய வெற்றி இலக்கை துரத்தும் நோக்கில் இங்கிலாந்து தனது பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இங்கிலாந்து விக்கெட்கள் சரமாரியாக சரியத் தொடங்கின.
இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பீட்டர்சன் மட்டும் சிறப்பாக ஆடி 63 ரன்களைக் குவித்தார்.
கடைசி வரிசையில் வந்த போபரா 54 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும் இந்தியப் பந்து வீச்சில் படு வேகம் இருந்ததால், இங்கிலாந்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இறுதியில், 37.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து.
ஜாகிர்கான் 3 விக்கெட்களையும், முனாப் படேல், ஆர்.பி.சிங், யூசுப் பதான், ஷேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications