யு-19 கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா!
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய சீனியர் அணி அசத்திக் கொண்டுள்ள நிலையில், மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்து வரும் உலக இளைஞர் அணிகளுக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கலக்கிக் கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் முதலில் நியூசிலாந்து ஆடியது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இந்தியா ஆடத் தொடங்கியது. அப்போது மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 191 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சவாலை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும், கேப்டன் விராத் கோலியும் சிறப்பாக சமாளித்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
கோஸ்வாமி 51 ரன்கள் எடுத்தார். விராத் கோலி 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 41.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா வெற்றி பெற்றது


Click it and Unblock the Notifications