கிரிக்கெட்- 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்ற இந்தியா!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முக்கிய ஆட்டத்தில் இன்று அடிலைடில் இந்தியாவும், இலங்கையும் மோதின.
இப்போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்ததால் ரசிகர்கள் இப்போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தில்ஷனும், ஜெயசூர்யாவும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இருவரையும் முனாப் படேல் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால் இந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது.
ஆனால் அவர்களைத் தொடர்ந்து வந்த சங்கக்காராவும், கேப்டன் மகிளா ஜெயவர்த்தனேவும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்.
குறிப்பாக சங்கக்காரா சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தார். மறு முனையில் ஜெயவர்த்தனேவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். சிறப்பாக ஆடிய சங்கக்காரா 128 ரன்களைக் குவித்தார். ஜெயவர்த்தனே தனது பங்குக்கு 71 ரன்களைக் குவித்தார்.
பின்னர் வந்தவர்களில் சில்வா மட்டும் சிறப்பாக ஆடி 21 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 238 ரன்களைச் சேர்த்திருந்தது.
இந்தியத் தரப்பில் முனாப் படேல், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே நட்சத்திர வீரர் சச்சின் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 2 பந்துகளை மட்டுமே அவர் சந்தித்தார்.
இன்னொரு ஓபனரான கம்பீர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராபின் உத்தப்பாவும் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ரோஹித் சர்மா சற்றே பொறுப்பாக ஆடி 24 ரன்களைச் சேர்த்து ரசிகர்களுக்கு தெம்பூட்டினார்.
ஆனால் யுவராஜ்சிங்கும், கேப்டன் டோணியும் சேர்ந்தபிறகுதான் ஆட்டத்தில் களை கட்டியது.
முத்தரப்பு தொடரில் இதுவரை சரியாக ஆடாமல் இருந்து வந்ததால் யுவராஜ் சிங் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இன்று தனது ஆட்ட்தைதக் காட்டினார் யுவராஜ்.
சிறப்பாக ஆடிய அவர் அபாரமான அரை சதத்தைப் போட்டார். 70 பந்துகளை மட்டுமே சந்தித்து 76 ரன்களைக் குவித்தார் யுவராஜ் சிங். இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடக்கம்.
மறு முனையில் மிகவும் பொறுப்பாக, அதேசமயம் நிதானமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார் டோணி. கடைசி வரை ஆட்டமிழக்காமல், தூணாக மாறி விளையாடிய டோணி, 68 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இன்றைய ஆட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சம் இர்பான் பதானின் சிறப்பான ஆட்டம். கேப்டனுக்குத் துணையாக ரன்களைக் குவித்த இர்பான், 41 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு அனில் போல உதவினார்.
இறுதியில் 49.1 ஓவரில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக இலங்கையின் குமார சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications