இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று இந்தியா, இலங்கை இடையே முக்கியப் போட்டி நடந்தது. இதில் இந்தியா வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி, முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து இலங்கை தனது ஆட்டத்தைத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான பெரைரா 8 ரன்களில் இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தார். ஆனால் ஜெயசூர்யாவும், சங்கக்காராவும் சேர்ந்து அடித்து ஆட ஆரம்பித்தனர். இருவரும் சேர்ந்து சிறப்பான ஸ்கோருக்கு அடித்தளமிட்ட போது, பிரவீண்குமார் பந்தில் சங்கக்காரா 33 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜெயசூர்யாவும், கேப்டன் ஜெயவர்த்தனேவும் சேர்ந்தனர். ஆனால் ஜெயவர்த்தனே 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரவீன் குமார் அவுட் செய்தார். தொடர்நது சில்வா ரன் ஏதும் எடுக்காத நிலையில் பிரவீன் குமார் பந்தில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து தில்ஷான் 8 ரன்களில் இஷாந்த் சர்மாவால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.
விரைவாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இலங்கை ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. இந்த நிலையில் ஜெயசூர்யாவும் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகவே இலங்கையின் நிலை மிகவும் மோசமானது. அவரை அவுட் ஆக்கியவர் இர்பான் பதான்.
இந்த நிலையில் கபுகெதரா மிகவும் பொறுமையாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். மிக நிதானமாக ஆடிய அவர் 86 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அணியின் கெளரவத்தை கொஞ்சம் போல காப்பாற்றினார்.
ஆனால் மறு முனையில் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். மிக பொறுமையாக ஆடி வந்த கபுகதெரா இறுதியில் ஹர்பஜன் சிங் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியில், 47.1 ஓவர்களிலேயே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இவந்து 179 ரன்களில் சுருண்டது.
இந்தியத் தரப்பில், இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல பிரவீன் குமாரும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹர்பஜன், இர்பான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
எளிதான வெற்றி இலக்குடன் இந்தியா விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர். இதில் உத்தப்பா அடித்து ஆடி ரன்களைக் குவிக்க முற்பட்டார். ஆனால் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த அவர் மலிங்கா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
ஆனால் அவருக்குப் பின்னர் சேர்ந்த சச்சினும், கம்பீரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். சச்சின் அதிரடியாக ஆடினார். 54 பந்துகளை மட்டுமே சந்தித்து 63 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் அடக்கம்.
இந்த நிலையில் முரளிதரன் பந்தில், தேவையில்லாத ஒரு ஷாட் அடித்து சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சச்சின்.
ஆனால் கம்பீர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். அதேசயம் மிகவும் நிதானமாக ரன் சேர்த்தார். 89 பந்துகளைச் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களை எடுத்தார். அவருக்குத் துணையாக யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி 36 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் 32.2 ஓவர்களிலேயே இந்தியா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக பிரவீன் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications