ஆஸ்திரேலியாவை நசுக்கியது இந்தியா - தொடரையும் வென்றது

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் தொடர் இன்று வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியுடன் முடிவடைந்தது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சொதப்பலான பந்து வீச்சால் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் நாக்பூரில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 441 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியபோதிலும், 355 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸைப் பறிகொடுத்தது.
இதையடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இந்திய வீரரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு 382 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தனர்.
இந்த இலக்கை தொடும் முயற்சியில் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சடசடவென சரிந்தனர்.
ஹர்பஜன் சிங்கும், அமீத் மிஸ்ராவும் சேர்ந்து ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை முறித்துப் போட்டனர். இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா தன் பங்குக்கு 2 விக்கெட்களை எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் மாத்யூ ஹெய்டன் மட்டுமே சற்று ஆடி 77 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இறுதியில், 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது.
சாதனைத் துளிகள் ...
- கடைசியாக 2003-04ம் ஆண்டு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றிருந்தது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
- டோணி தலைமையில் இந்தியா வென்றுள்ள முதல் டெஸ்ட் தொடர் இது.
- கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றுள்ளது. உலகில் வேறு எந்த அணியும் இவ்வளவு அதிகமான தொடர் வெற்றிகளைப் பெற்றதில்லை.
- 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெல்ல முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.
கங்குலியை கெளரவப்பபடுத்திய டோணி
இன்றைய போட்டியில் முக்கிய அம்சமாக போட்டியின் கடைசி நிமிடங்களில் கேப்டன் பொறுப்பை, சவுரவ் கங்குலியிடம் கொடுத்து அவரைக் கெளரவப்படுத்தினார் கேப்டன் டோணி.
இந்தப் போட்டியுடன் கங்குலி ஓய்வு பெறுவதால் அவரைக் கெளரவிக்கும் வகையில் இதைச் செய்து அசத்தினார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
டெஸ்ட் தொடர் நாயகனாக இந்தியாவின் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 15 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேசன் கிரெஜா தேர்வானார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications