ஜாபர், லட்சுமண், கங்குலி அபாரம்: இந்தியா 616க்கு டிக்ளேர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வாசிம் ஜாபர் அருமையான இரட்டை சதம் போட்டார். கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் தலா ஒரு சதம் அடித்தனர். 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 616 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
இந்திய கேப்டன் கும்ளே டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்று துவங்கிய முதல் நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் அருமையாக ஆடி சதம் அடித்திருந்தார். சச்சின் 82 ரன்களும், டிராவிட் 50ரன்களும் எடுத்தனர்.
ஆட்ட நேர இறுதியில் ஜாபர் 192 ரன்களுடனும், கங்குலி 17 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று காலை 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 8 நிமிடங்கள், 4 பந்துகளில் ஜாபர் தனது இரட்டை சதத்தைத் தொட்டார். 274 பந்துகளைச் சந்தித்த ஜாபர், 34 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் போட்டார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரட்டை சதம் போட்ட 5வது இந்திய வீரர் ஜாபர். 202 ரன்கள் எடுத்திருந்த ஜாபர், சொஹைல் தன்வீர் பந்தில் கம்ரான் அக்மலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் கங்குலியும், லட்சுமணும் சேர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவைத்தெடுத்தனர். குறிப்பாக சொந்த ஊரில் ஆடிய கங்குலி படு சிறப்பாக ஆடி அபாரமாக சதம் போட்டார்.
156 பந்துகளைச் சந்தித்த கங்குலி 102 ரன்கள் எடுத்திருந்த போது சல்மான பட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய துணை கேப்டன் டோணியும், வி.வி.எஸ்.லட்சுமணும் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை நையப் புடைத்தனர்.
லட்சுமண் 178 பந்துகளில் 112 ரன்களுடனும், டோணி 81 பந்துகளில் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த போது கேப்டன் கும்ப்ளே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 616 ரன்களைக் குவித்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் சொஹைல் தன்வீர், கனேரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சல்மான் பட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் தனது முதல் வீரராக யாசிர் அகமதை இழந்தது. 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் கும்ப்ளே பந்து வீச்சில் வீழ்ந்தார்.
ஆட்ட நேர இறுதியில், பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை எடுத்திருந்தது. சல்மான் பட் 26 ரன்களுடனும், யூனிஸ் கான் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications