ஆஸி. வீரர் மீதான புகாரை திரும்பப் பெறுகிறது இந்தியா

இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் கூட்டம் பெர்த் நகரில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அனில் கும்ப்ளே, ஹாக் மீதான புகாரை கைவிட இந்தியா தீர்மானித்திருப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனி நபர்களை விட கிரிக்கெட்தான் மேலானது. அதன் அடிப்படையில் பிராட் ஹாக் மீதான புகாரை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை இத்துடன் மறந்து விடவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
இந்திய அணி மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாருடனும், பிற நிர்வாகிகளுடனும் பேசினோம். அவர்களும் இதற்கு சம்மதித்தனர்.
வீரர்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை வீரர்கள் மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய அணி வீரர்களும், கேப்டன் கும்ப்ளேவும் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதாகும்.
இதேபோல ஆஸ்திரேலியாவும் நடந்து கொண்டு ஹர்பஜன் சிங் மீதான புகாரைத் திரும்பப் பெற்றால் ஆஸ்திரேலிய டூர் இன்னும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்றார் ஷெட்டி.
இந்தியாவின் முடிவுக்கு பிராட் ஹாக் வரவேற்பு தெரிவித்துள்ளார். கேப்டன் அனில் கும்ப்ளேவைப் பார்த்து பாஸ்டர்ட் என்று திட்டியதாக ஹாக் மீது போட்டி நடுவர் மைக் புராக்டரிடம் இந்திய அணி நிர்வாகம் புகார் கூறியது. அதன் பேரில் புராக்டர், ஹாக்கை விசாரிக்கவுள்ளார்.
ஆனால் பாஸ்டர்ட் என்ற வார்த்தை இனவெறி வார்த்தை அல்ல என்று ஐசிசியின் விதிமுறைகள் கூறுகிறதாம். எனவே ஹாக் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று பேச்சு நிலவி வந்த நிலையில் தற்போது ஹாக் மீதான புகாரை இந்திய அணி நிர்வாகம் பெருந்தன்மையுடன் வாபஸ் பெற்றுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications