Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா - பாக் அவுட்!

கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்று விட்டது. நேற்று நடந்த போட்டியில் இலங்கையை தோற்கடித்து, பாகிஸ்தான் அணியை போட்டித் தொடரிலிருந்து இந்தியா வெளியேற்றியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட ஏற்கனவே இலங்கை தகுதி பெற்றிருந்தது. ஆனால் வங்கதேசத்தை வென்று, பாகிஸ்தானிடம் தோற்றதால் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது.

இந்த சிக்கலான நிலையில் நேற்று இலங்கையை சந்தித்தது இந்தியா. இந்தப் போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்குப் போகலாம். தோற்றால், இன்று நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டியில், வங்கதேசம் வென்றால், ரன் ரேட் அடிப்படையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இந்தியா இருந்தது.

இந்த பரபரப்பான பின்னணியில் நேற்று இந்தியாவும், இலங்கையும் சந்தித்தன. முதலில் இலங்கை அணி பேட் செய்தது. ஜெயசூர்யா சிறப்பாக ஆடி 43 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் சங்கக்காரா 7 ரன்களில் வீழ்ந்தார்.

கேப்டன் ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். ஓஜா பந்தில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கபுகதேரா அதிரடியாக ஆடி 75 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக சமரசில்வாவும் ரன் குவித்தார். அவர் 50 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்தவர்களில் வீரரத்னே மற்றும் மிராண்டா ஆகியோர் தலா 23 ரன்களைச் சேர்த்தனர். இறுதியில், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்து விட்டது இலங்கை.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா மட்டுமே சற்று ஸ்டிராங்காக பந்து வீசினார். அவருக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆர்.பி.சிங், இர்பான் பதான், பிரவீன் குமார், ஓஜா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கம்பீரும், ஷேவாக்கும் மீண்டும் ஒரு இனிய இன்னிங்ஸைக் கொடுத்தனர்.

கம்பீர் அபாரமாக ஆடி 68 ரன்களைக் குவித்தார். ஷேவாக் 42 ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவும் தன் பங்குக்கு விளாசினார். சிறப்பாக ஆடிய அவர் 54 ரன்களைக் குவித்தார். அதேபோல கேப்டன் டோணியின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. 64 ரன்களை அவர் குவித்தார்.

ஆட்டம் முடியப் போகும் தருவாயில் இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் வந்த யுவராஜ் சிங்கும், ரோகித் சர்மாவும் இணைந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

யுவராஜ் சிங் 36 ரன்களும், ரோகித் 22 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. யுவராஜ் சிங் வெற்றிக்கான ரன்களை பவுண்டரி அடித்து தாண்டினார்.

இறுதியில், 46.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை மட்டும் இழந்து 310 ரன்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானின் கனவு தகர்ந்து விட்டது. இன்று வங்கதேசத்துடனான அதன் போட்டி வெறும் காட்சிப் போட்டியாக மாறி விட்டது.

இந்தியா, இலங்கை இடையிலான இறுதிப் போட்டி 6ம் தேதி நடைபெறுகிறது.

--

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+