இந்தியாவை மீட்ட டோணி, லட்சுமண் அபார அரை சதம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற களமிறங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் யாருமே சரியாக விளையாடவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 85.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்தது.
இன்று 2ம் நாள் ஆட்டத்தை துவங்கிய 1 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96.2 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் கேப்டன் கும்ப்ளே 4 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 2 விக்கெட்டுகளையும், கங்குலி, முனாப் படேல் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியா களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக வாசிம் ஜாபரும், தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினர். ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தினேஷ் கார்த்திக் அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வாசிம் ஜாபருடன், டிராவிட் சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது. பின்னர் உண்ட மயக்கமோ என்னவோ தெரியவில்லை, இந்திய அணி மடமட வென்று சரிந்தது.
வாசிம் ஜாபர் 32 ரன்களுக்கும், டிராவிட் 38 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரங்களான டெண்டுல்கர் 1 ரன்னிலும், கங்குலி 8 ரன்கள் எடுத்தும் ரெஸ்ட் எடுக்க போய் விட்டனர்.
ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய துணை கேப்டன் டோணியும், வி.வி.எஸ். லட்சுமணனும் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை அதல பாதாளத்திலிருந்து மீட்டனர்.
டோணி 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில், கேப்டன் கும்ப்ளே 7 ரன்களுடனும், லட்சுமண் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
டோணி - லட்சுமண் இணை 6வது விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்தது. இவர்களின் ஆட்டம் மட்டும் இல்லாவிட்டால் இந்தியா படு மோசமான ஸ்கோரை எட்டியிருக்கும்.
2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications