கொழும்பு: கொழும்பு முதல் டெஸ்ட் போட்டியில், முத்தையா முரளீதரன் மற்றும் அஜந்தா மெண்டிஸின் புயல் வேகப் பந்து வீச்சில் சிக்கி, இந்தியா ஒரு இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது.
கொழும்பில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 600 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஜெயவர்த்தனே, சமரவீரா, தில்ஷான், வர்னபுரா ஆகியோர் சதம் போட்டனர்.
இந்திய பந்து வீச்சாளர்கள் சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக கும்ப்ளேவின் பந்து வீச்சில் எந்தவித சரக்கும் இல்லை.
இதையடுத்து நேற்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பந்து வீச்சாளர்களை விட மோசமாக சொதப்பினர் பேட்ஸ்மேன்கள். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா நிலைதடுமாறியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், 6 விக்கெட்களை இழந்து 159 ரன்களுடன் பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.
முத்தையா முரளீதரன் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்களை சாய்த்தார். மெண்டிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
சச்சின் (27), ஷேவாக் (25), கங்குலி (23), டிராவிட் (14), கம்பீர் (39) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியாவின் நிலை மோசமானது.
இன்று காலை இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. லட்சுமண் 19 ரன்களுடனும், கும்ப்ளே ஒரு ரன்னுடனும் ஆட்டத்ைதத் தொடங்கினர். லட்சுமண் நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடி இந்தியாவுக்காக சற்றே ரன் சேர்க்கத் தொடங்கினார். மிகுந்த நிதானத்துடன் ஆடிய அவர் 118 ரன்களில் 56 ரன்களை சேர்த்தார்.
அவருக்குத் துணையாக இஷாந்த் சர்மா சிறிது நேரம் நின்றார். இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் 13 ரன்களை எடுத்தார்.
முரளீதரன் 5 விக்கெட்களும், மெண்டிஸ் 4 விக்கெட்களும் வீழ்த்தி இந்தியாவின் சீர்குலைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இறுதியில், இந்தியாவின் இன்னிங்ஸ் 223 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்தியா பாலோ ஆன் வாங்கியது.
மகா மோசமான ஆட்டம்
இரண்டாவது இன்னிங்ஸிலாவது இந்தியா சுதாரித்து ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் இன்னிங்ஸை விட மகா மோசமாக ஆடினர் நமது ஸ்டார் வீரர்கள்.
கம்பீர் மட்டும் சற்று நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க முயன்றார். ஆனால் மற்ற வீரர்கள், ஏதோ கல்யாணத்திற்கு வந்து அட்டென்டென்ஸ் கொடுத்து விட்டுப் போவதை போல வருவதும், போவதுமாக இருந்தனர்.
ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க முயலவில்லை. ஷேவாக் 13, லட்சுமண் 21, டெண்டுல்கர் 12, டிராவிட் 10, கங்குலி 4 என வேகமாக வெளியேற இந்தியா பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
முரளிதரனும், மெண்டிஸும் இந்தியாவின் முதுகெலுப்பை முறிக்கும் வகையில் பந்து வீசி கலங்கடித்தனர். 100 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து விட்டது இந்தியா.
கம்பீர் மட்டும் கொஞ்சம் போல ஆடி 43 ரன்களை எடுத்தார். முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்தது 39 ரன்கள்.
இறுதியில், இந்தியா 138 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் சுருண்டு போனது.
முரளீதரன் மேஜிக் மறுபடியும் இலங்கைக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை சாய்த்த முரளி, இந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவைப் புரட்டிப் போட்டு விட்டார்.
அதேபோல புதிய சூறாவளியாக கிளம்பியிருக்கும் அஜந்தா மெண்டிஸ், முதல் இன்னிங்ஸைப் போலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை நிலை குலைய வைத்தார்.
இப்படியாகா, மோசமான பேட்டிங் மற்றும் பெளலிங் காரணமாக கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.
11 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றிக்கு உதவிய முரளீதரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தோல்வி இந்தியாவுக்கு டெஸ்ட் வரலாற்றில் கிடைத்துள்ள 3வது மிகப் பெரிய மோசமான தோல்வி ஆகும்.
இந்தியாவின் இந்த மோசமான தோல்வி ரசிகர்களிடையே பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ இளம் வீரர்கள் வாய்ப்புக்காக துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், முன்னணி வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து லட்டு லட்டாக வாய்ப்பு கிடைத்தும் கூட அவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி சொதப்புவது ரசிகர்களை மனம் உடையச் செய்துள்ளது.