இந்தியா, இலங்கை: நாளை 2வது ஒரு நாள் போட்டி
சென்னை: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு நகரில் நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி - 20ல் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று இலங்கை சென்றது.
தம்புலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை துவங்கவிருக்கும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம்புலாவில் கம்பீர், ரெய்னா ஜோடி சிறப்பாக விளையாடியது. அடுத்து வந்த டோணி அரைசதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தார். இவர்களது அசத்தல் ஆட்டம் நாளையும் தொடர்ந்தால் இலங்கை தப்புவது கடினமே.
சாதிப்பாரா முரளி...
இந்திய பேட்ஸ்மேன்களின் சூப்பர் ஆட்டத்துக்கு முன்னால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெண்டிஸ், முரளிதரன் கூட்டணியால் அணிக்கு வெற்றி தேடித்தர முடியவில்லை.
தற்போது ஒரு நாள் போட்டிகளில் 501 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் நாளை கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்த்தினால் அதிக விக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரத்துடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் போட்டியில் ஜெயசூர்யா சதம் அடித்திருப்பது இலங்கைக்கு நம்பிக்கையான விஷயம்.


Click it and Unblock the Notifications