யுவராஜ், ஷேவாக் அதிவேக சதம் - இந்தியா 363 - முரளிதரன் சாதனை
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய யுவராஜ், ஷேவாக் சதம் பதிவு செய்தனர். முரளிதரன் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 502 விக்கெட்களுடன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி -20 போட்டியில் விளையாட இருக்கிறது.
முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரராக வந்த சச்சின், பெர்னாண்டோ வீசிய இரண்டாவது ஓவரிஸ் ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார்.
ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் அவர் 7 ரன்களுக்கு எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார். அவர் இத்தொடரின் மூன்று போட்டிகளிலும் எல்.பி.டபிள்யு ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மூன்று போட்டிகளிலும் அவர் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த வந்த காம்பிர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
இந்நிலையில் களமிறங்கிய யுவராஜ், சேவக்குடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். பவுண்டரிகளாக விளாசிய யுவராஜ் 40வது பந்தில் அரைசதம் கடந்தார். இவரை தொடர்ந்து ஷேவாக்கும் அரைசதம் அடித்தார். இவர் 44 பந்துகள் எடுத்துக் கொண்டார்.
இந்திய அணி 26.5வது ஓவரில் 200 ரன்களை தொட்டது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய யுவராஜ் 82வது பந்தில் சதம் பதிவு செய்தார். இது இலங்கை அணிக்கு எதிராக அவர் அடிக்கும் முதல் சதமாகும். மொத்தத்தில் 11வது சதம்.
மறுமுனையில் ஷேவாக்கும் 75வது பந்தில் சதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டியில் அவரது 10வது சதமாகும்.
இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தநிலையில் யுவராஜ், முரளிதரன் பந்தில் அவுட்டானார்.
இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 502 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
யுவராஜ் 95 பந்தில் 1 சிக்சர், 17 பவுண்டரி 117 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஷேவாக் 90 பந்தில் 116 ரன்கள் எடுத்திருந்த போது ஜெயசூர்யாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். ரெய்னா 9 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த யூசுப் பதான், தோனி அதிரடியாக விளையாடினர். மகரூப் பந்தில் சிக்சர் அடிதுது யூசுப் பதான் 50 ரன்களை தாண்டினார். யூசுப் பதான் 59, தோனி 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications