தோல்வியை தவிர்த்த இந்தியா -நேப்பியர் டெஸ்ட் டிரா
நேப்பியர்: வி.வி.எஸ்.லட்சுமணின் அபார சதம் மற்றும் அவருக்கு முன் கம்பீர் போட்ட சதம், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரின் டைம்லி அரை சதங்கள் ஆகியவற்றால் நேப்பியர் 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையாமல் டிராவுடன் தப்பியது இந்தியா.
நேப்பியரில் நடந்து வந்த 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்கஸில் 619 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி 305 ரன்களில் ஆட்டமிழந்து, பாலோ ஆன் பெற்றது. பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது இந்தியா.
தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் அபாரமாக ஆடி சதம் போட்டார். அதேபோல டிராவிடும், சச்சினும் அரை சதம் போட்டனர். ஷேவாக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் நிலை கேள்விக்குறியானது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் கம்பீர் 102 ரன்களுடனும், சச்சின் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று காலை கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கம்பீர் மேலும், 35 ரன்கள் சேர்த்த நிலையில் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சச்சின் மேலும் 6 ரன்கள் எடுத்து 64 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
ஆனால் வி.வி.எஸ்.லட்சுமண் தனது அனுபவத்தை முழுமையாக காட்டி மிகப் பொறுமையாக ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லட்சுமண் 124 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
அவருக்குத் துணையாக ஆடினார் யுவராஜ் சிங். சிறந்ததொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 63 பந்துகளைச் சந்தித்து 54 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஆட்டம் முடிய சில நிமிடங்களுக்கு முன்னதாக இரு கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதித்தனர். இதனால் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்திருந்தது.
ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் இவர் இரட்டை சதம் விளாசியிருந்தார்.


Click it and Unblock the Notifications