பெங்களூர்: பெங்களூரில் இன்று நான்காவது ஒரு நாள் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடினார்.
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் 4வது போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரை வெல்லும்.
இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரராக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் இன்று ஷேவாக்குடன் இணைந்து களம் இறங்கினார்.
ஷேவாக் ஆரம்பம் முதலே பட்டாசாகப் பொறிந்தார். மறு முனையில் சச்சின் டெண்டுல்கர் நிதானமான பேட்டிங்கை வெளி்ப்படுத்தினார்.
முன்னதாக இன்றைய போட்டி குறித்து நேற்று கேப்டன் எம்.எஸ்.டோணி கூறுகையில், வீரேந்திர ஷேவாக்குடன், சச்சின் டெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நான் விரும்புகிறேன். சச்சின் அணியில் இடம் பெற்றாலே அது சந்தோஷமான விஷயம்தான்.
இடையில் அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. எனவேதான் முதல் 3 போட்டிகளில் அவர் ஆடவில்லை. அவரால் முடிந்த வரை விளையாடவே அனைவரும் விரும்புகிறோம். சச்சின் விரும்பினால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கலாம் என்று கூறியிருந்தார்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம்தான் சச்சின் ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற சச்சின் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற மும்முரமாக இருந்தாலும், இந்தப் போட்டியிலாவது வென்று தொடரை லைவ் ஆக வைத்திருக்க இங்கிலாந்து முயலும் என்பதில் சந்தேகமில்லை.