டெல்லி டெஸ்ட்: வெற்றியை நெருங்கியது இந்தியா

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முடிவை நெருங்கி விட்டது.
இன்றைய ஆட்ட நேர இறுதியில், இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்திருந்தது. டெஸ்ட் போட்டியை வெல்ல இன்னும் 32 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 231 ரன்களை எடுத்தது. இந்தியா 276 ரன்களை எடுத்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் இன்று காலை தனது இன்னிங்ஸை 247 ரன்களுக்கு இழந்தது.
இதையடுத்து இந்தியா வெற்றி பெற 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸை தெம்புடன் தொடங்கியது. ஆனால் முதல் இன்னிங்ஸைப் போல இதிலும் திணேஷ் கார்த்திக் ஏமாற்றமளிக்கும் வகையில் ஆடினார். 1 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுபுறம் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாபர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். 53 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய கங்குலியும், சச்சின் டெண்டுல்கரும் சிறப்பாக ஆடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர்.
கங்குலி 48 ரன்களும், சச்சின் 32 ரன்களும் எடுத்து வரை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 78 ரன்களைச் சேர்த்தனர்.
இன்றைய போட்டியில் சச்சின் புதிய சாதனையைப் படைத்தார். 24 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆலன் பார்டர் எடுத்திருந்த 11,174 ரன்களைக் கடந்து இந்த சாதனையைப் பெற்றார் சச்சின்.
முதலிடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் உள்ளார்.
நாளைய ஆட்டம் மிச்சமிருக்கும் நிலையில், இந்தியா 32 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டியிருப்பதால், இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications