சென்னை: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் நாளிலேயே ரூ.25 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 26ம தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. 2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் டிக்கெட் விற்பனை படு விறுவிறுப்பாக இருந்தது.
கடைசியாக இந்தியா-இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டி 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. ஆனால், மழையால் 2 நாள் மட்டுமே ஆட்டம் நடந்தது.
இந் நிலையில் இந்தியா-தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200, ரூ.700, ரூ.1,200, ரூ.2,000, ரூ.5,000, ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் நாளிலேயே ரூ.25 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.