காம்பிர் அபார சதம் - மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

ஆஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் காமன்வெல்த் பாங்க் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.
பிப்ரவரி 3ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் இந்தியா ஆடியது. ஆனால் ஆஸ்திரேலியா ஆடத் தொடங்கியபோது மழை குறுக்கிட்டு ஆட்டத்தைக் கெடுத்தது. இதனால் போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் ஆளுக்கு 2 புள்ளிகளைக் கொடுத்தனர்.
இந்நிலையில் அதே பிரிஸ்பேன் மைதானத்தில் 2வது ஆட்டமாக, இந்தியாவும், இலங்கையும் சந்தித்தன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சேவக்-சச்சின் ஜோடி பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த போது சேவக் 33 ரன்கள் எடுத்து அமரசிங்கே பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அவருக்கு பின்னர் களமிறங்கிய கவுதம் காம்பிர் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே சச்சின் 52 பந்துகளில் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் களமிறங்கினார். அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லையோ என்னவோ தெரியவில்லை, 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் டோணி, கவுதம் காம்பிருடன் ஜோடி சேர்ந்து மிகவும் பொறுமையாக விளையாடினார். இருவரும் சேர்ந்து அடித்த ரன்கள்தான் அணிக்கு கெளரவமான ஸ்கோரை தேடிக் கொடுத்தன.
குறிப்பாக காம்பிர் அபாரமாக ஆடி சதம் போட்டார். டோணியும் சிறப்பாக ஆடி 88 ரன்களை சேர்த்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது.
காம்பிர், 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 101 பந்துகளில் 102 ரன்களுடனும், கேப்டன் டோணி 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 பந்துகளில் 88 ரன்களை குவித்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணியின் முரளீதரன் 2 விக்கெட்டுகளும், அமர சிங்கே, மலிங்கா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 268 ரன்கள் என்ற இலக்கு இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மழை பெய்யத் தொடங்கியது. மழை நிற்காமல் தொடர்ந்து வலுத்ததால் இந்த ஆட்டத்தையும் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் தரப்பட்டது.
இந்தியா பங்கேற்ற இரு போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும் இப்போதைக்கு இத்தொடரில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன.
அடுத்த போட்டி சிட்னியில் பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது. அதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 2வது முறையாக மோதவுள்ளன. சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நடுவர்களின் சொதப்பலால் தோல்வியைத் தழுவ நேரிட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஒரு நாள் போட்டியில் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சச்சின் புது சாதனை:
இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனை படைத்தார். இன்றைய போட்டியில், 35 ரன்கள் எடுத்த சச்சின், ஒரு நாள் போட்டிகளில் 16 ஆயிரம் ரன்களை எடுத்து, அந்த சாதனையைப் படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரராகவும் சச்சின் உருவெடுத்துள்ளார். சச்சின் தற்போது 16,007 ரன்களை சேர்த்துள்ளார். 2வது இத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 12,207 ரன்களுடன் உள்ளார்.
3வது இடத்தில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களுடன் உள்ளார்.
இந்த வரிசையில் இந்தியாவின் செளரவ் கங்குலி 11,363 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் 10,835 ரன்களும், ராகுல் டிராவிட் 10,585 ரன்களும் எடுத்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 11,782 ரன்களை எடுத்துள்ளார். இது முதலிடத்தில் உள்ள பிரையன் லாராவை விட 172 ரன்கள் குறைவாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications