3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி இலக்கு 413 ரன்கள்

பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி 413 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி பெர்த் நகரில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 98.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் டிராவிட் 93 ரன்களும், சச்சின் 71 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவின் ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கும்ளே, இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 80.4 ஓவர்களில் 294 ரன்களை எடுத்தது. இந்தியாவின் வி.வி.எஸ். லட்சுமணன் அதிக பட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 413 ரன்கள் தேவை என்று இந்திய அணி இலக்கு நிர்ணயம் செய்தது.
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி துவக்க ஆட்டக்காரர்களான பில் ஜாக்குவஸ் மற்றும் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இர்பான் பதான் தகர்த்தார். பின்னர் களமிறங்கிய ரிக்கி பாண்டிங் 24 ரன்களுடனும், மைக்கேல் ஹூசை 5 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 348 ரன்கள் எடுக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியினர் 2 நாட்கள் வரை பொறுத்து நிதானமாக ஆடுவார்களா அல்லது இலக்கை தொட அதிரடி ஆட்டம் ஆடுவார்களா என நாளைய ஆட்டத்தில் தெரிந்து விடும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications