ராஜ்கோட்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்தியாவுக்கும் நாளை ராஜ்கோட்டில் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் புரட்டிப் போட்ட தெம்புடன் இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டித் தொடரை சந்திக்கிறது இந்தியா.
மொத்தம் 7 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இதுதவிர 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.
நாளை முதல் ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள மாதவராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் இந்தியா பேவரைட்டாக உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய தைரியமும், தொடரை வென்ற சந்தோஷத்திலும், இங்கிலாந்தை ஒரு கை பார்க்க இந்திய வீரர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இல்லை என்றாலும் கூட கம்பீர், ஷேவாக் உள்ளிட்ட பார்மில் உள்ள வீரர்கள், இந்திய அணிக்கு வெற்றி வாகை சூடித் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் கேப்டன் டோணி இங்கிலாந்து தொடரை எதிர்கொண்டுள்ளார்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில், ஐசிசி தடை காரணமாக விளையாட முடியாமல் போன கெளதம் கம்பீர், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றுள்ளார். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்துத் தருவார்கள் என்று நம்பலாம்.
ஷேவாக் துணைக் கேப்டனாகப் பணியாற்றவுள்ளார். மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோலி ஆகியோர் தங்களது திறமையை நிரூபிக்க காத்துள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை அவர் தட்டிச் சென்றார்.
சர்மா இல்லாத நிலையில் ஜாகிர்கான், முனாப் படேல், ஆர்.பி.சிங் ஆகியோரை வைத்து சமாளிக்க வேண்டிய நிலையில் டோணி உள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் மட்டுமே அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
ஒரு வேளை பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டால் அவருக்குப் பதில் முனாப் படேல் அல்லது ஆர்.பி. சிங் நீக்கப்படலாம்.
இந்திய அணி விவரம்:
டோணி, ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், முரளி விஜய், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி.சிங்.