மொஹாலி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இன்னிங்ஸ் வெற்றியைத் தவிர்த்து, இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ள மிகப் பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. பெங்களூரில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டி மோஹாலியில் நடந்தது. இதில் ஆரம்பம் முதலே இந்தியாவின் கை மேலோங்கியிருந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்திருந்த சாதனையை முறியடித்தார். ஷேவாக், கம்பீர் ஆகியோர் பட்டாசாகப் பொரிந்து ரன் மழை பொழிந்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் காண்பித்த சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 320 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில், இந்தியாவின் அமீத் மிஸ்ரா 7 விக்கெட்களை வீழ்த்தினார். செளரவ் கங்குலியும், கம்பீரும் தலா ஒரு சதம் போட்டனர்.
விக்கெட் கீப்பர் டோணி அபாரமாக ஆடி முதல் இன்னிங்ஸில் 92 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும் குவித்து அசத்தினார். அத்தோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
முன்னதாக இன்று காலை கடைசி நாள் ஆட்டத்ைத ஆஸ்திரேலியா தொடங்கியது. 515 ரன் என்ற இமாலய இலக்குடன், 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ், உணவு இடைவேளைக்கு முன்னதாகவே முடிந்து போனது.
ஜாகிர்கான் ஹாதின், கேமரூன் ஒயிட், பிரெட் லீ ஆகியோரை வேகமாக ஆட்டமிழக்கச் செய்தார். அமித் மிஸ்ரா, மிச்சல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் ஆகியோரை அவுட் செய்து ஆஸி இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாதினை 37 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் ஜாகிர் கான்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற வெற்றிக் கணக்குடன் முன்னிலை பெற்றுள்ளது.