லாகூர்: இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புப் பின்னணியில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் திட்டமிட்டபடி இந்திய அணி கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் பதட்டமான சூழ்நிைல நிலவினாலும் கூட இந்திய அணியின் பயணம் திட்டமிட்டபடி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஷபாகத் நக்மி கூறுகையில், இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புக்கு முன்பே ராவல்பிண்டி போட்டிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டது. ராவல்பிண்டியில் விளையாட இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா இங்கு வரும்போது அமைதி திரும்பி விடும் என நம்புகிறோம். பாகிஸ்தானின் முக்கிய விளையாட்டு மையங்களில் ராவல்பிண்டியும் ஒன்று.
அங்குள்ள ஸ்டேடியத்ைத சமீபத்தில்தான் புதுப்பித்தோம். இந்தியா இங்கு வரும்போது அனைத்தும் சுமூகமாக இருக்கும் என நம்புகிறோம் என்றார்.
கடந்த 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி பாகிஸ்தான் சென்றபோது குண்டுவெடிப்புக்கு இலக்கான மரியாட் ஹோட்டலில்தான் தங்கியது என்பது நினைவிருக்கலாம். 2004ல் இதே ராவல்பிண்டியில் ஒரு டெஸ்ட், ஒரு ஒரு நாள் போட்டியில் இந்தியா விளையாடியது. 2006ம் ஆண்டு ஒரு ஒரு நாள் போட்டியில் விளையாடியது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி 47 நாள் பயணமாக கராச்சி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
முதல் டெஸ்ட் போட்டி கராச்சியிலும், 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும், 3வது டெஸ்ட் போட்டி லாகூரிலும் நடைபெறும்.
பரீதாபாத்தில் பிப்ரவரி 6ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன. 2வது போட்டி லாகூரில் 8ம்தேதியும், 3வது போட்டி ராவல் பிண்டியில் 11ம் தேதியும், 4வது போட்டி முல்தானில் 14ம் தேதியும், 5வது போட்டி கராச்சியில் 17ம் தேதியும் நடைபெறுகிறது.
பிப்ரவரி 19ம் தேதி டுவென்டி 20 போட்டி கராச்சியில் நடைபெறும்.