3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
கான்பூர்: கான்பூரில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா, வென்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.குவஹாத்தியில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. சண்டிகரில் நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இந்த நிலையில் 3வது போட்டி இன்று கான்பூரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கங்குலி, சச்சின் இறங்கினர். 2வது ஒருநாள் போட்டியில் ஜொலித்த சச்சின் இன்றைய போட்டியில் 29 ரன்களில் தன்வீர் பந்துவீச்சில் கம்ரான் அக்மலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பின்னர் ஆமை வேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த கங்குலியும், காம்பிரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 28 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் இருந்த போது அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் மற்றும் கேப்டன் டோணி ஆகியோர் சேர்ந்து இந்திய அணியின் ரன் உயர காரணமாக இருந்தனர்.
யுவராஜ் சிங் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 95 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். கேப்டன் டோணி 52 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட்டானதால் அரை சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்டார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் உதிரியாக 28 ரன்களை அள்ளி கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் தன்வீர், அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்தர் மற்றும் உமர்குல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றிக்கு 295 ரன்கள் தேவை என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சல்மான பட்டும், அப்ரிதியும் இறங்கினார்கள்.
சல்மான் பட் மட்டும் சட்டென்று அவுட்டாகாமல் இருக்க, வரும் வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்புவதை மட்டும் லட்சியமாக கொண்டிருந்தனர். சல்மான் பட் அபாரமாக ஆடி 17 பவுண்டரிகளுடன், 142 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்திய அணி சார்பில் ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இருவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications