இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி - முரளி கார்த்திக் அசத்தல்
மும்பை:
மும்பையில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை சிரமப்பட்டு வீழ்த்தியது இந்தியா. இப்போட்டியில் பவுலிங்கில் கலக்கிய (6 விக்கெட்டுக்கள்) முரளி கார்த்திக், இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கிலும் கை கொடுத்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவுடனான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று இந்தியா பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவோ ஏற்கனவே தொடரை வென்று விட்டது.இந்த நிலையில் நேற்று கடைசி ஒரு நாள் போட்டியில், இரு அணிகளும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதிக ரன்களை குவித்து இந்தியாவை நெருக்குதலுக்கு ஆளாக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் அதை தவிடுபொடியாக்கி விட்டனர்.
ஜாகிர்கானின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினர். மைக்கேல் கிளார்க் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பதான் பந்தில் கில்கிறைஸ்ட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிலைத்து ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்த ரிக்கி பான்டிங்கை ஆர்.பி.சிங் பதம் பார்த்தார். பான்டிங் 57 ரன்கள் சேர்த்தார்.
இதன் பிறகுதான் முரளியின் சுழல் ஆஸ்திரேலியாவை சுருட்ட ஆரம்பித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் டக் டக்கென சாய்ந்தன. ஹாட்ஜ், சைமண்ட்ஸ், ஹாடின், ஹோப்ஸ், ஹாக், பிரெட் லீ, பிரேக்கன் என ஆறு பேட்ஸ்மென்களை பெவிலியனுக்குப் பேக்கப் பெய்தார் முரளி.
முரளியின் சுழலில் சிக்கிச் சுருண்ட ஆஸ்திரேலியா 41.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 193 ரன்களுடன் மூட்டை கட்டப்பட்டது.
எளிதான இலக்கு என்பதால் இந்தியா ஈசியாக ஜெயித்து விடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அப்படியெல்லாம் ஜெயிச்சுடுவோமா என்பது போல இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக ஆரம்பித்தது.
கங்குலியும், திணேஷ் கார்த்திக்கும் டக் அவுட் ஆகி இந்தியாவுக்கு பேரிடியைக் கொடுத்தனர்.
டெண்டுல்கர் கட்டையப் போட்டுக் கொண்டிருந்தார். மறுபக்கம் யுவராஜ் சிங் தடுமாறினார். சச்சின் 21 ரன்களிலும், யுவராஜ் சிங் 15 ரன்களிலும் வீழ்ந்தனர். இதனால் இந்தியாவின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியது.
ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 64 ரன்கள் என்ற மகா மோசமான நிலையில் இந்தியா இருந்தது. இதனால் இந்தியா இந்தப் போட்டியிலும் தோல்வியுறப் போகிறது என்ற அவ நம்பிக்கைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில்தான் ராபின் உத்தப்பா அசத்த ஆரம்பித்தார். புத்திசாலித்தனமாகவும், தைரியமாகவும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்ட அவர் நிதானமாக ஆடி ரன்களைக் குவித்து விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி வைத்தார். அவருக்குத் துணையாக ஹர்பஜன் சிங்கும் ரன் சேர்க்க ஆரம்பித்தார்.
உத்தப்பா சிறப்பாக ஆடி 47 ரன்களைச் சேர்த்தார். ஹர்பஜன் 19 ரன்களைச் சேர்த்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications