சண்டீகர் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
சண்டீகர்:
சண்டீகரில் நடந்த 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 7 ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி பெங்களூரில் மழையால் ரத்தானது.
கொச்சியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஹைதராபாத்தில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சதம் அடித்தும் மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது.
இதனால் தொடர்ந்து 2 போட்டிகளை வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது ஆஸ்திரேலியா.
இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கடந்த 2 போட்டிகளில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட கங்குலி இன்றைய போட்டியில் சச்சினோடு சேர்ந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். ஆனால் ரன்கள் மட்டும் ஆமை வேகத்தில் ஏறியது.
இதில் சச்சினுக்கு ஒருநாள் போட்டி என்று யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது. அவர் டெஸ்ட் போட்டி என்ற நினைப்பிலேயே விளையாடினார். இந்திய அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருக்கும் போது கங்குலி 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், சச்சினோடு சேர்ந்து மெதுவாகவே ஆடினார். பின்னர் 55 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப்ஸ் பந்தில் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் யுவராஜ்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய கேப்டன் டோணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் 119 பந்துகளை சந்தித்து 79 ரன்கள் எடுத்து சச்சின் ரன் அவுட் ஆனார். 3வது விக்கெட் ஜோடியாக களமிறங்கிய முன்னாள் கேப்டன் டிராவிட் தன் பங்குக்கு 13 ரன்களை மட்டும் எடுத்து பிராக்கென் பந்துவீச்சில் போல்டாகினார்.
அதன் பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா, கேப்டன் டோணியுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் உத்தப்பா 18 பந்துகளில் 30 ரன்களையும், கேப்டன் டோணி 35 பந்துகளில் 50 ரன்களையும் எடுத்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் இந்திய அணி 291 ரன்களை குவித்தது. இதில் உதிரியாக வந்த ரன்கள் மட்டும் 39 ஆகும்.
வெற்றிக்கு 292 ரன்கள் தேவை என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டும், ஹைடனும் களமிறங்கினர். கில்கிறிஸ்ட் 18 ரன்னில் ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஜாகீர்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிக்கிபாண்டிங் மெதுவாக விளையாட மறுமுனையில் ஹைடன் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பாண்டிங், பதான் பந்துவீச்சில் டோணியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய கிளார்க் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் அவராலேயே கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய சைமண்ட்ஸ், ஹைடனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஆஸ்திரேலியாவால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தும், 2 பேரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்கச் செய்த இந்திய கேப்டன் டோணி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெங்சர்க்கார் நேற்று கொடுத்த அதிரடி பேட்டி எப்படியெல்லாம் வேலை செய்கிறது பார்த்தீர்களா.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications