3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி பெர்த் நகரில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் இந்திய அணி கேப்டன் அனில் கும்ப்ளே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 98.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் டிராவிட் 93 ரன்களும், சச்சின் 71 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவின் ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கும்ளே, இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 80.4 ஓவர்களில் 294 ரன்களை எடுத்தது. இந்தியாவின் வி.வி.எஸ். லட்சுமணன் அதிக பட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 413 ரன்கள் தேவை என்று இந்திய அணி இலக்கு நிர்ணயம் செய்தது.
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி துவக்க ஆட்டக்காரர்களான பில் ஜாக்குவஸ் மற்றும் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இர்பான் பதான் தகர்த்தார். பின்னர் களமிறங்கிய ரிக்கி பாண்டிங் 24 ரன்களுடனும், மைக்கேல் ஹூசை 5 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
வெற்றிக்கு 348 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹூசையும் சேர்ந்து சிறிது அச்சத்தை உண்டாக்கினர். ஆனால் பாண்டிங், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின் அடுத்து களமிறங்கிய மைக்கேல் கிளார்க் நங்கூரம் போல் நின்று கொண்டு இந்திய அணிக்கு சிறிது கிலியை உண்டாக்கினாலும் எதிர்முனையில் நின்று விளையாடிய வீரர்கள் பெவிலியன் செல்வதிலேயே ஆர்வம் காட்டினர். பின்னர் கிளார்க் 81 ரன்கள் எடுத்த நிலையில் கும்ளே பந்து வீச்சில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
இருப்பினும் கடைசியில் களமிறங்கிய மிட்செல் ஜான்சன் அதிரடியாக ஆட்டம் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் 80 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
இதில் 2 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.
முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86.5 ஓவர்களில் 340 ரன்களை மட்டும் எடுத்தது.
இந்தியாவின் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளையும், ருத்ரா பிரதாப் சிங், அனில் கும்ளே, சேவக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
4வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications