நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடி சதம் போட்டார். இது அவரது 40வது டெஸ்ட் சதமாகும். ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண் அரை சதம் போட்டனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது.
கும்ப்ளே ஓய்வு பெற்று விட்டதால் முதல் முறையாக முழு நேர கேப்டனாக களம் இறங்கியுள்ள டோணி, இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
கெளதம் கம்பீர் விளையாட தடை விதிக்கப்பட்டதால், அவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் இடம் பெற்றார்.
ஷேவாக் அதிரடியாக ஆடினார். முதல் போட்டி என்ற பயமே இல்லாமல், சிறப்பாகவே ஆடினார் விஜய்யும்.
ஷேவாக் சிறப்பாக ஆடி 69 பந்துகளில் 66 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 9 பவுண்டரிகளும் அடக்கம்.
விஜய், 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிட் டக் அடித்து ஏமாற்றினார்.
பின்னர் சேர்ந்த டெண்டுல்கரும், 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வி.வி.எஸ். லட்சுமணும் விக்கெட் விழுவதைத் தடுத்து ஆட ஆரம்பித்தனர்.
வி.வி.எஸ்.லட்சுமண் நிதானமாக ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறு முனையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தார் சச்சின். 188 பந்துகளைச் சந்தித்து 109 ரன்களைக் குவித்தார். இது சச்சினுக்கு 40வது டெஸ்ட் சதமாகும்.
பின்னர் கங்குலியும், டோணியும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர்.
85 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்திருந்தது.