இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் ரூ. 6 கோடி வரி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாம். இதனால் இந்திய அணியினர் கலங்கிப் போயுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர்கள், பொழுதுபோக்குத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வரி விதிக்கப்படுவது அமலில் உள்ளது. அவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி விதிக்கப்படும். இது ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே இதுவரை இருந்து வந்தது.
ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் வரி விதிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவரங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
வரி விதிப்பு பல மடங்காக இருப்பதால், கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் கலங்கிப் போயுள்ளனர்.
வரி விகிதப்படி இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட ரூ. 6 கோடி வரை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். ஒரு கிரிக்கெட் வீரருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட 6,000 அமெரிக்க டாலரும், ஒரு நாள் போட்டியில் விளையாட 4,000 அமெரிக்க டாலரும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
வரித் தொகை அதிகமாக இருப்பதால் இதைக் குறைக்க வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
மேலும், இந்த வரி விதிப்பிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி உள்ளதா என்பது குறித்து மும்பையில் உள்ள ஆடிட்டர்கள் சிலரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியுள்ளது. அதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆலோசனைகளைக் கூற முன்வந்துள்ளதாம்.
இந்திய வீரர்களே, வரியை நினைத்துக் கவலைப்பட்டு ரன் குவிக்க மறந்துடாதீங்க!
Story first published: Wednesday, December 7, 2011, 17:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications