இலங்கை தொடர்: இந்திய அணி 6ம் தேதி தேர்வு
மும்பை: இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கேவலமான முறையில் தோற்று விட்ட நிலையில், அடுத்த போட்டியில் எப்படியாவது வெல்வோம் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் தலைமையில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கலந்துகொள்வார். நிறைய விளையாடி சோர்வடைந்து விட்டதால் தற்போதைய டெஸ்ட் தொடரில் டோணி பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியும் 6ந் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.
இந்தியா - இலங்கை ஒரு நாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications