பெங்களூர்: இந்திய அணி வீரர்கள் இன்னும் பள்ளிக்கூடத்தில் விளையாடுவது போல கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நக்கலடித்துள்ளார்.
பெங்களூரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதையொட்டி நேற்று செய்தியாளர்களை பான்டிங் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், புத்தம் புதுப் பொலிவுடன் ஆஸ்திரேலிய அணி போட்டிக்கு தயாராக உள்ளது. எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை. இந்திய அணிக்குத்தான் அது அதிகம் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்திய வீரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் எங்களுக்கு மிரட்டலாக இருப்பார்கள். இந்தியாவுக்கு வரும் எந்த அணியும் இந்த சவாலை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
இருப்பினும் நாங்கள் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். ஜெய்ப்பூர், ஹைதராபாத்தில் எங்களுக்கு நல்ல பயிற்சி கிடைத்துள்ளது. இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளிக்கும் வகையில் சிறப்பாக விளையாடுவோம். நன்கு பயிற்சி பெற்ற அணியாக நாங்கள் உள்ளோம் என நம்புகிறேன்.
ஒரு ஸ்பின்னருடன் போட்டியை நாங்கள் சந்திக்கவுள்ளோம். அவர் யார் என்பது போட்டிக்கு முன்னதாக அறிவிப்போம்.
செளரவ் கங்குலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே அவர் நெருக்கடியின்றி விளையாடலாம். ஆனால் ரசிகர்கள் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பார்கள். பொதுவாக இந்திய சீனியர் வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடி உள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே போன்றோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறக் கூடாது. படிப்படியாக அவர்கள் விலகுவதே நல்லது என்றார் அவர்.