'விஷம் கக்கும்' ஹெய்டன்: நாமும் திட்டப் பழகணும்-டோணி

ஆஸ்திரேலிய வீரர்களின் அசிங்கமான போக்கு நாளுக்கு நாள் மகா மோசமாகி வருகிறது. இஷ்டத்திற்குத் திட்டுகிறார்கள், தாறுமாறான வார்த்தைகளால் இந்திய வீரர்களை விமர்சித்து வருகின்றனர்.
அனில் கும்ப்ளேவை மகா மோசமான வார்த்தையால் திட்டினார்கள். கேட்டால், ஆஸ்திரேலியாவில் அது கெட்ட வார்த்தைத இல்லை என்றனர்.
சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங்கை வம்புக்கு இழுத்தார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். பதிலுக்கு ஹர்பஜனும் அதிரடியாக பேசினார். ஆனால் சைமண்ட்ஸை இனரீதியாக ஹர்பஜன் சிங் திட்டி விட்டதாக புயலைக் கிளப்பி விட்டது ஆஸ்திரேலியா.
அந்த சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்த நிலையில் மீண்டும் அதே சிட்னியில் இன்னொரு பிரச்சினை தலை தூக்கியது. சிட்னியில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங்குடன் மோதினர். சைமண்ட்ஸ் இம்முறை இஷாந்த் சர்மாவை வம்புக்கிழுத்தார்.
இதில் ஹெய்டன் பேசிய பேச்சுக்கள்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. மைதானத்தில் ஹர்பஜனைப் பார்த்து பைத்தியக்காரன் என்று பொருள் படும் படி மேட் பாய் என்று திட்டினார் ஹெய்டன்.
ஆனால் பின்னர் அவர் பிரிஸ்பேன் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், நான் பேட் பாய் என்றுதான் கூறினேன், மேட் பாய் என்று கூறவில்லை என்று விளக்கம் அளித்தார் ஹெய்டன்.
ஆனால் அத்தோடு நில்லாமல், மேட் பாய் என்ற வார்த்தையை விட மகா மோசமான, கடுமையான வார்த்தையை தனது பேட்டியில் பயன்படுத்தினார் ஹெய்டன்.
ஹெய்டன் தனது பேட்டியில் கூறுகையில், எனக்கும், ஹர்பஜனுக்கும் இடையே நீண்ட போர் நடந்து வருகிறது. முதல் முறை நான் பார்த்தபோது இந்த 'விஷக் களைச் செடி' எப்படி இருந்ததோ, அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறது.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையே அதை தெளிவாகக் கூறும். எதற்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. எப்போது தாண்ட வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது. ஆனால் ஹர்பஜன் எப்போது எல்லை தாண்டித்தான் நடந்து கொள்கிறார். அதனால்தான் அவர் மீது பல வீரர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்தியா விளையாடும் போட்டிகளில் எல்லாம் தோற்கிறது. அதனால்தான் விரக்தியில் எங்கள் மீது புகார் கூறுகிறார்கள்.
பேட் பாய் என்று கூறியதை குற்றவார்த்தை என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் ஹெய்டன்.
சிட்னியில் நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், கேப்டன் ரிக்கி பான்டிங், ஹெய்டன் மற்றும் சைமண்ட்ஸ் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.
அதில், ஹெய்டன் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கை சீண்டி வருவதாக கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹெய்டன், ஹர்பஜன் சிங்கை விஷக் களை என்று கூறியுள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், எல்லாம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கோபத்துடன் பதிலளித்தார்.
இதேபோல சிட்னி போட்டியின்போது இஷாந்த் சர்மாவை, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடுமையாக திட்டினார்.
இஷாந்த் சர்மா வீசிய பந்தில் சைமண்ட்ஸ் வீழ்ந்தார். இதனால் கடுப்பான சைமண்ட்ஸ், இஷாந்த் சர்மாவைப் பார்த்து கோபமாக எதையோ கூறினார். அதற்கு இஷாந்த் சர்மா பதிலளித்தார்.
ஆனால் இந்த விவகாரத்தில் இஷாந்த் சர்மா மீது மட்டும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை இந்திய அணி நிர்வாகம் எதிர்க்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது குறித்து இந்திய அணி ஐசிசியிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் புகார் கொடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
நாமும் திட்டப் பழகணும் - டோணி அதிரடி:
இதற்கிடையே, ஆஸ்திரேலியர்களைப் போலவே நாம் பதிலுக்கு திட்டப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கேப்டன் டோணி அதிரடியாக கூறியுள்ளார்.
ஹோபர்ட் ஒரு நாள் போட்டியில் இலங்கைய வீழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இப்படிக் கூறினார் டோணி.
அவர் கூறுகையில், போட்டியின்போது எதிரணி வீரர்களை திட்டுவது அதிகரித்து வருகிறது. இதை ஆஸ்திரேலியர்கள் ஒரு கலை போல மாற்றி விட்டனர். இதற்காக நாமும் சும்மா இருந்து விட முடியாது. நாமும் அதை கற்றுக் கொள்ள வேண்டும். விரைவில் இந்தியர்களும் அந்தக் கலையில் தேர்ச்சி பெற்று விடுவார்கள்.
சிட்னி போட்டியின்போது இஷாந்த் சர்மா நடந்து கொண்ட விதத்தில் எந்த தவறும் இல்லை. சைமண்ட்ஸ் திட்டினார். அதற்கு இஷாந்த் பதிலளித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் நம்மைத் தவறு செய்யத் தூண்டுகிறார்கள். அப்படி செய்யும்போது நாம் சற்று கவனமாக இருக்க வேண்டியதுதான். சைமண்ட்ஸ் சொன்னதற்குப் பதில் மட்டுமே அளித்தார் இஷாந்த். அவராக எந்த அவதூறையும் வீசவில்லை என்றார் டோணி.
ஆஸ்திரேலிய வீரர்களின் அடாவடியைப் பார்க்கும்போது கிரிக்கெட் விளையாட்டிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய பெரிய விஷச் செடியாக அவர்கள்தான் ஆழமாக வளர்ந்து வருகிறார்கள் என்று தோன்றுகிறது.
இதற்கிடையே ஹர்பஜனை தரக் குறைவாக பேசிய ஹைடனுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications