அடுத்தடுத்து 3 'ஆப்' அடித்த அஜிங்கியா.. அசத்துதுய்யா ராஜஸ்தான் ராயல்ஸ்!
மொஹாலி: எங்கோயோ போய்ட்டீங்க என்று கமல் படத்தில் வசனம் வரும். அதேபோலத்தான் எங்கோ இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இப்போது 2வது இடத்திற்கு வந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் சற்றே அசந்தால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து விடும் நிலை.
ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை படு அழகாக தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.
பிளே ஆப் சுற்றுக்கு வெகு அருகே தற்போது வந்து நிற்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் ஸ்திரமான ஆட்டத்தால் சென்னை அணி மேலும் சுதாரிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
சரி ஹைலைட்ஸ் பார்ப்போம்

கை கொடுக்கும் தெய்வம் ரஹானே
ராஜஸ்தான் அணியின் கண் கண்ட தெய்வமாக அஜிங்கியா ரஹானே திகழ்கிறார். அவர்தான் கடந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கு வலு சேர்த்தார். நேற்றைய போட்டியில் அரை சதம் போட்டார் ரஹானே. இது தொடர்ச்சியான 3வது அரை சதமாகும்.

67-63-59
முதலில் புனே வாரியர்ஸுக்கு எதிராக 67 ரன்களைக் குவித்தார். அடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 63 ரன்களை விளாசினார். நேற்றைய போட்டியில் 59 ரன்களைச் சேர்த்தார்.

6வது இடத்தில் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நேற்றைய தோல்வியால் துவண்டு போய் நிற்கிறது. தற்போது அது 6வது இடத்தில் இருக்கிறது. 10 புள்ளிகளுடன் அது உள்ளது.

பேட்டுடன் கொஞ்சி விளையாடிய சஞ்சு
ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் அசத்தினார். 33 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிங்ஸுக்கு மார்ஷ் ராஜா
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பில் ஷான் மார்ஷ் சிறப்பாக ஆடினார். 64 பந்துகளைச் சந்தித்த அவர் 77 ரன்களைக் குவித்தார்.

திடீரென ஆடிய கில்லி
சரியாக ஆடாமல் உள்ள ஆடம் கில்கிறைஸ்ட் நேற்று சிறப்பாக ஆடினார். 32 பந்துகளைச் சந்தித்த அவர் 42 ரன்களைக் குவித்தார்.

3 விக்கெட் சாய்த்த கெவன் கூப்பர்
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவன் கூப்பர் பந்து வீச்சில் ஜொலித்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.


Click it and Unblock the Notifications