சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் பலம் வாய்ந்த இரு முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்வளவு மூத்த வீரர்கள் இல்லாத புனே வாரியர்ஸ் அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
சென்னையில் நடைபெற்று வரும் 19வது லீக் போட்டியில் டாஸ் வென்ற புனேவாரியர்ஸ் அணி கேப்டன் ரோஸ் டெய்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஆச்சரியமளிக்கும் வகையில் தொடக்க வீரரான மைக் ஹசிக்குப் பதில் அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டிருக்கிறார். மொஹித்துக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் அனிருத் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் ஓவரில் 13 ரன்கள்!
புனே வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா, பின்ச் ஆகியோர் களம் இறங்கினர். சென்னை அணியில் நன்னெஸ் வழக்கம் போல முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் 1 ரன்னை உத்தப்பா எடுத்தார். 2வது பந்தை பின்ச் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 4வது பந்தில் பின்ச் மீண்டும் ஒரு பவுண்டரியை அடித்தார். 5வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரியை விளாசினார் பின்ச். முதல் ஓவரிலேயே புனே வாரியர்ஸ் அணி 13 ரன்களைக் குவித்து சென்னை அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
பவுண்டரிகளுக்கு அனுப்பிய பின்ச்
2-வது ஓவரை ஜடேஜா வீசினார். 2-வது பந்தை எதிர்கொண்ட பின்ச் அதை பவுண்டரிக்குத் தட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அதிர்ந்து போயினர். 2வது ஓவரில் 19 ரன்களை எடுத்தது புனேவாரியர்ஸ். 3வது ஓவர் முடிவில் 23 ரன்களை எடுத்தது.

4வது ஓவரை ஜடேஜா வீச முதல் பந்தையே பின்ச் பவுண்டரிக்கு தட்டிவிட்டார். 3வது பந்தையும் அவர் பவுண்டரிக்கு தட்டிவிட்ட மளமளவென புனே வாரியர்ஸ் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின்ச் பவுண்டரிகள்தான் என்றில்லை வாய்ப்பு கிரீஸ் பக்கத்தில் கிடைத்தாலும் கூட ரன்னை சேர்ப்பது என்ற முடிவோடு விளையாடியதையே பார்க்க முடிந்தது. இந்த ஓவரில் மட்டும் 9 ரன்களை எடுத்து விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை எடுத்திருந்தது புனே வாரியர்ஸ். 5வது ஓவரை நன்னெஸ் வழக்கம் போல அவரது பந்தை பவுண்டரிக்குத் தட்டினார் பின்ச். 5வது ஓவர் முடிவில் புனே வாரியர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது.
6வது ஓவரிலும் உத்தப்பா, அஸ்வின் வீசிய 3வது பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த ஓவரில் 6 ரன்கள் எடுத்து 6வது ஓவர் முடிவில் 48 ரன்களை குவித்தது. 7வது ஓவரில் ஜடேஜா வீசிய 2வது பந்தில் உத்தப்பா 1 ரன் அடிக்க புனே வாரியர்ஸ் அணி 50ரன்களை எட்டியது.7வது ஓவர் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 53 ரன்களை எட்டியது.
10வது ஓவர் முடிவில் 78 ரன்கள்
8வது ஓவரை அஸ்வின் வீச முதல் பந்தையே பின்ச் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். 8வது ஓவரின் முடிவில் உத்தப்பா-பின்ச் ஜோடி 48 பந்துகளில் 63 ரன்களைக் குவித்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் போராடினர். பின்ச் 30 பந்துகளில் 48 ரன்களை எடுத்து அரைசதத்தை தொடும் நிலையில் இருந்தார். உத்தப்பாவோ 18 பந்துகளில்13 ரன்கள் என்ற நிலையில் இருந்தார். இனிவரும் ஓவர்களாவது ரன்களை வாரிக் குவிப்பதை சென்னை அணி நிறுத்துமா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்தனர். 9வது ஓவரை மோரிஸ் வீசினார். மோரிஸ் பந்தையும் நொறுக்கித் தள்ளினார் பின்ச். இந்த ஓவரில் 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி பின்ச் அரைசதத்தைக் கடந்தார். இந்த ஓவர் முடிவில் 70 ரன்களை எட்டியது
புனே வாரியர்ஸ் தொடக்கத்திலேயே வலுவான அடித்தளம் அமைத்திருக்கும் புனேவாரியர்ஸ் அணியின் ஜோடியை பிரிக்க 10-வது ஓவரை பிராவோ வீசினார். ஆனால் உத்தப்பா அவரது முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 10வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை எடுத்தது புனேவாரியர்ஸ்.
அப்பாடா பின்ச் வீழ்ந்தார்!
11வது ஓவரை மீண்டும் மோரிஸ் வீச பின்ச்சின் பவுண்டரிவேட்டை ஓயவில்லை. மீண்டும் பவுண்டரிக்கு மோரிஸீன் 2வது பந்தை அனுப்பி வைத்தார். 12வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்பாடா இந்த ஓவரில்தான் புனேவாரியர்ஸ் அணி ஒரு பவுண்டரியும் எடுக்கவில்லை என்ற நிம்மதி சென்னை அணிக்கு ஏற்பட்டது. 12வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்களை எடுத்தது புனே வாரியர்ஸ் அணி. அந்த அணியின் ஜோடியை பிரிக்க முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியதானது சென்னை அணிக்கு.13வது ஓவரில் ஜடேஜா வீசிய 2-வது பந்தை இறங்கி அடித்து சிக்சருக்கு9 தூக்கி அடித்தார் பின்ச். ஆனால் 3வது பந்தில் பின்ச் அவுட் ஆக சென்னை அணியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி தெரிந்தது. புனேவாரியர்ஸ் அணி 96 ரன்களை அப்போது எடுத்திருந்தது.45 பந்துகளில் அதிரடியாக 67 ரன்களை எடுத்தார் பின்ச். இதில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.
களத்தில் 30 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களுடன் நிற்கும் உத்தப்பாவுடன் கேப்டன் டெய்லர் இணைந்தார். 13வது ஓவர் முடிவில் அந்த அணி 1விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை எடுத்தது. 14வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் டெய்லர் ஒரு ரன் அடிக்க புனேவாரியர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது. பின்ச் போல டெய்லர் அதிரடியாக ஆடாததால் ரன் குவிப்பு வேகம் சற்று மட்டுப்படுத்தப்பட்டது.
உத்தப்பாவும் அவுட்!
15வது ஓவரை மோரிஸ் வீசினார். அவரது முதல் பந்தை அடித்த உத்தப்பா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புனே வாரியர்ஸ் அணி அப்போது 101 ரன்களை எடுத்தது. 33 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா 26 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். களத்தில் 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை எடுத்திருந்த டெய்லருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்தார். 15வது ஓவர் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது. 16வது ஓவரை பிராவோ வீச மிக எளிதாக ஸ்மித் அதை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 2வது பந்தையும் அவர் பவுண்டரிக்கு அழகாக தட்டிவிட்டார். 5வது பந்தும் பவுண்டரி லைனுக்கு ஓடியது. ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 16வது ஓவர் முடிவில் 118 ரன்களை புனேவாரியர்ஸ் எடுத்தது.
3,4வது விக்கெட்டுகள் இழப்பு
17வது ஓவரின் முதல் பந்தை மோரிஸ் வீச கேப்டன் டெய்லர் தூக்கி அடிக்க அது அழகாக மீண்டும் ஜடேஜா கையிலேயே விழுந்தது. டெய்லர் 13 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களை எடுத்திருந்தார். 3விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை புனே வாரியர்ஸ் எடுத்தது. களத்தில் 7 பந்துகளில்12ரன்களை எடுத்திருக்கும் ஸ்மித்துடன் மார்ஷ் இணைந்தார். மோரிஸின் 6வது பந்தை ஸ்மித் அழகாக தூக்கி அடித்து சிக்சருக்கு அனுப்பி வைத்தார். 17வது ஓவர் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 128 ரன்களை எடுத்திருந்தது. 18வது ஓவரில் பிராவோ வீசிய முதல் பந்தை மார்ஷ் அடிக்க அது பவுண்டரி லைனில் நின்றிருந்த அல்பி மோர்கெல் கையில் சிக்கியது. இதனால் அவர் 2 ரன்களுடன் வெளியேறினார். 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை புனே வாரியர்ஸ் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து மணீஷ் பாண்டே இறங்கினார். இந்த ஓவரின் முடிவில் 131 ரன்களை புனே வாரியர்ஸ் எடுத்தது.
கடைசி 2 ஓவர்கள்
19 வது ஓவரை ரன்களை தொடக்கத்தில் வாரி வழங்கிய வள்ளல் நன்னெஸ் வீசினார். தாம் வள்ளலே என்பதை மீண்டும் நிரூபித்தார். நன்னெஸ் வீசிய 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பி வைத்தார் ஸ்மித். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். நன்னெஸ் புண்ணியத்தால் புனே வாரியர்ஸ் அணி 19வது ஓவர் முடிவில் 147ரன்களை எட்டியது. நன்னெஸ் 4 ஓவர்களை வீசி 42 ரன்களை வாரி கொடுத்திருக்கிறார். இறுதி ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தை மிகவும் ஸ்டைலாக அழகாக சிக்சருக்கு அனுப்பினார் ஸ்மித். இதன் மூலம் 15 பந்துகளில் 38 ரன்களை குவித்தார் ஸ்மித். 4வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் ஸ்மித். 5வது பந்தில் மணீஷ்பாண்டேவை பிராவோ அவுட் ஆக்கினார். அவர் 8 பந்துகளில் 9ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரு பவுண்டரியும் அடங்கும். பின்னர் அபிஷேக் நாயர். இணைந்தார்.
20வது ஓவர் முடிவில் புனேவாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது புனே வாரியர்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல 160 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிர்ச்சியான தொடக்கம்
இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஸ்ரீகாந்த் அனிருத் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 2வது பந்தில் அனிருத் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூவில் அவுட் ஆகி வெளியேறினார் அனிருத். சென்னை சூப்பர் கிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே தமது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மைக் ஹசியை நீக்கி அனிருத்தை இணைத்ததால் எந்த பலனும் ஏற்படவில்லை. முரளி விஜய்யுடன் சுரேஷ் ரெய்னா இணைந்தார். இருவரும் கடந்த போட்டிகளில் நன்றாக விளையாடி ரன்குவித்தவர்கள் என்பதால் சென்னை ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த ஓவரில் சென்னை அணி ரன் ஏதும் எடுக்கவில்லை. புனே வாரியர்ஸின் புவனேஷ்குமார் 'மெயிடன்' விக்கெட்டை எடுத்தார். சென்னை அணி சொந்த மைதானத்திலேயே மோசமான நிலையில்தான் தமது ஆட்டத்தை தொடங்க்கியது.
ரன்கள் எடுக்க தடுமாற்றம்!
2வது ஓவரை அசோக் திண்டா வீசினார். இந்த ஓவரில் ஆளுக்கு ஒரு ரன் எடுத்து தங்களது கணக்கை தொடங்கினர் முரளி விஜய்யும். 4வது பந்தில் விஜய் அவுட் ஆக வேண்டியது. கேட்ச் மிஸ்ஸானது. தப்பித்தார் முரளி விஜய். இந்த ஓவரின் கடைசி பந்தில் ரெய்னா ஒரு பவுண்டரி அடித்க்க சென்னை அணியின் ஸ்கோர் 2வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது.
ஆறுதல் தந்த 4வது ஓவர்
3வது ஓவரை புவனேஷ்வர் வீசினார். இந்த ஓவரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களால் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4வது பந்தை வைட் வீசியதால் ஒரு ரன் கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஒரு ரன் அடித்தனர். 6வது பந்திலும் ஒரு ரன் அடிக்க 10 ரன்களை ஒருவழியாக எட்டியது சென்னை அணி. திண்டா வீசிய 4வது ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தில் அடுத்தடுத்து முரளி விஜய் பவுண்டரிகள் அடுக்க சென்னை ரசிகர்கள் சற்றே ஆறுதலடைந்தனர். 5வது பந்தையும் ரெய்னா தூக்கி அடிக்க பவுண்டரி லைனில் தடுக்கப்பட்டது. 4வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை எட்டியது.
மீண்டும் விக்கெட் பறிபோனது!
5வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். இவரது 2-வது பந்தில் ரெய்னா அவுட் ஆனார். 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்களை எடுத்திருந்தது. 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய்யுடன் பத்ரிநாத் இணைந்து கொண்டார். புவனேஷ்வரின் பந்தை பத்ரி பவுண்டரிக்கு அனுப்ப முயன்றார். ஆனால் திண்டாவின் அற்புதமான பீல்டிங்கினால் அது தடுக்கப்பட்டது. 5வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எடுத்து தடுமாறியது.
6வது ஓவரை மார்ஷ் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தில் லாவகமாக ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார் பத்ரிநாத். சென்னை அணி ஏன் இப்படி விளையாடுகிறது என்று கொதித்துப் போய்கிடந்த ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் 4வது பந்தில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார் முரளி விஜய். 6வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 38ரன்களை எடுத்திருந்தது.
விஜய் அவுட்
வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவர், கடைசி பந்து வரை போராடி வெல்வது என்பதுதான் பார்முலாவாக வைத்திருக்கிறது. அனேகமாக இன்றைய போட்டியும் அப்படியாகத்தான் இருக்குமோ என்கிற வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. 7வது ஓவரில் அபிஷேக் நாயர் வீசிய பந்தை லாவகமாக முரளி விஜய் அடிக்க அது பவுண்டரிக்குப் போகாமல் தடுக்கப்பட்டது. 4வது பந்தில் நாயர் வீசிய பந்தை முரளி விஜய் தூக்கி அடிக்க அது டெய்லரால் காட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார். முரளி விஜய் 22 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களை அடித்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும்.
சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்களை எடுத்தது. 6 பந்தில் 7 ரன்கள் எடுத்திருக்கும் பத்ரிநாத்துடன் ஜடேஜா களம் இணைந்து கொண்டார். அபிஷேக் நாயரின் 5வது பந்தை பதிரி பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 7வது ஓவர் முடிவில் 45 ரன்களை சென்னை அணி எடுத்தது. 8வது ஓவரை பின்ச் வீசினார். அவரது 5வது பந்தை பத்ரிநாத் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 8வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 54 என ஸ்கோர் இருந்தது.
10வது ஓவரில் 63 ரன்கள்
9வது ஓவரை மீண்டும் நாயர் வீசினார். இந்த ஓவரில் சென்னை வீரர்கள் அடித்து விளையாடமுடியவில்லை.3 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்திருந்தனர். 10வது ஓவரை ராகுல் ஷர்மா வீசினார். இந்த ஓவரிலும் சொல்லிக் கொள்ளும்படியாக சென்னை அணியால் ரன்களைக் குவிக்க முடியவில்லை.10 வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை எடுத்தது சென்னை அணி. 60 பந்துகளில் 97ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி.
11வது ஓவரில் நாயர் வீசிய 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் பத்ரிநாத். இந்த ஓவரின் முடிவில் 74 ரன்கள் சேர்ந்தது. 54 பந்துகளில்86 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சென்னை அணி வழக்கம் போல கடைசி பந்து வரைக்கும் இழுத்துவிடும் என்கிற வகையிலேயே விளையாடி வருகிறது.
தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்
12வது ஓவரை ராகுல் ஷர்மா வீசினார். இந்த ஓவரில் கூடுதலாக 4 ரன்களே எடுக்க முடிந்தது. 13வது ஓவரை மார்ஷ் வீசினார். அவரது 2-வது பந்தை ஜடேஜா அற்புதமாக பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். மார்ஷின் கடைசி பந்தை பத்ரிநாத் தூக்கி அடிக்க கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார். 25 பந்துகளை எதிர்கொண்ட பத்ரிநாத் 34 ரன்களை எடுத்திருந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்தது.
மேலும் 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி ஜடேஜாவுடன் இணைந்தார். ஜடேஜா 18 பந்துகளில் 19 ரன்களை எடுத்த நிலையில் இருந்தார். 14வது ஓவரை ராகுல் ஷர்மா வீசினார். அவரது 2-வது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க அது சிகசருக்குப் பறந்து போனது. இக்கட்டான நிலையில் இருந்த சென்னை அணிக்கு இந்த சிக்சர் உறுதுணையாக இருந்தது. இந்த ஓவரின் முடிவில்சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்தது.
15வது ஓவரை மார்ஷ் வீசினார். ரசிகர்களோ டோணியின் அதிரடி ஆட்டத்துக்காக காத்திருந்தனர். ஆனால் நிதான ஆட்டத்தை டோணி இந்த ஓவரில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 4வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா தூக்கி அடிக்க திண்டா அவுட் ஆக்கினார். 22 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 27 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணி 98 ரன்களுக்குள் 5வது விக்கெட்டையும் பறிகொடுத்தது. 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் பிராவோ, டோணியுடன் இணைந்தார். 15வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்தது சென்னை அணி. 30 பந்துகளில் 61ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி.
16வது ஓவரின் 2வது பந்தை ராகுல் ஷர்மா வீச டோணி 3 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 102 ரன்களை ஒருவழியாக எட்டியது. இந்த ஓவரின் 5வது பந்தில் பிராவோ அவுட் ஆனார். அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்தார். சென்னை அணி 104வது ரன்னுக்கு தமது 6 விக்கெட்டை பறிகொடுத்தது. 25 பந்துகளில் 56 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருநதது சென்னை அணி.9 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருக்கும் கேப்டன் டோணியின் அல்பி மோர்கல் இணைந்து கொண்டார். மைக் ஹசிக்கு பதிலாக அல்பி மோர்கல் இணைக்கப்பட்டிருக்கிறார்.
நெருக்கடியில் சென்னை
17வது ஓவரை மார்ஷ் வீசினார். ஆனால் சென்னை அணியின் ஆட்டம் நம்பிக்கைக்குரியதாக இல்லையே என்ற நிலையில் 5வது பந்தில் ஒரு சிக்சரை அல்பி மோர்கல் அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால் துவண்டு கிடந்த சென்னை ரசிகர்கள் துள்ள ஆரம்பித்தனர். இந்த ஓவரின் 18 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 18வது ஓவரை திண்டா வீசினார். திண்டாவின் 3வது பந்தை டோணி அடிக்க அதை ஸ்மித் கேட்ச் பிடித்தார். இதனால் சென்னை அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 115 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை பறிகொடுத்தது சென்னை அணி.
தோல்வியை நோக்கி..
அல்பி மோர்கலுடன் மோரிஸ் இணைந்து கொண்டார். 18வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்த சென்னை அணி 12 பந்துகளில் 42ரன்கள் எடுக்கவேண்டிய நெருக்கடியில் சிக்கியது. 19வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார்.6 ஓவரில் 36 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் 20வது ஓவரை சென்னை அணி எதிர்கொண்டது.
ஆனால் முதல் பந்தில் அல்பி மோர்கன் சிக்சரை நோக்கி அடித்த பந்தை பின்ச் பிடிக்க சென்னை அணியின் தோல்வி உறுதியானது. 3வது பந்தில் அஸ்வின் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் அஸ்வின் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார். இறுதிப் பந்தில் ஒரு ரன் அடிக்க சென்னை அணி மொத்தம்20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனே வாரியர்ஸிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.