சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள 6வது ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் வாங்க இன்று பெரும் கூட்டம் கூடி விட்டது.
வந்து விட்டது ஐபிஎல் திருவிழா. ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை தினந்தோறும் டுவென்டி 20 போட்டிகள்தான்.இதில் சென்னையில் 10 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 8 போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பந்தப்பட்டவை. மற்ற இரண்டில் ஒன்று குவாலிபயர் 1. இன்னொன்று எலிமினேட்டர்.
முதல் போட்டி ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அதில் மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோதவுள்ளன.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி பெங்களூடன், 15ம் தேதி புனே வாரியர்ஸுடன், ஏப்ரல் 22ம் தேதி ராஜஸ்தானுடன், ஏப்ரல் 25ம் தேதி ஹைதராபாத்துடன், 28ம் தேதி கொல்கத்தாவுடன், மே 2ம் தேதி டெல்லியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.

சென்னை- மும்பை அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் காலையில் இருந்து ஸ்டேடியத்தில் திரண்டு இருந்தனர். ஆனால் இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று எழுதி கொடுத்த பிறகே டிக்கெட் விற்பனையை தொடங்க வேண்டும் என்று போலீசார் கேட்டனர்.
இதனால் டிக்கெட் விற்பனையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தன. ரூ.750 முதல் ரூ.10 ஆயிரம் வரை விலையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்ச விலையான ரூ.750க்கான டிக்கெட்டை வாங்கவே ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது.