கொழும்பு டெஸ்ட்: ஜெயவர்த்தனே, வர்னபுரா அபார சதம்!
கொழும்பு: கொழும்பில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் வர்னபுரா அபார சதம் போட்டார். கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் சதம் அடித்ததால் இலங்கை 300 ரன்களைத் தாண்டியுள்ளது. இந்திய பந்து வீச்சு எந்த வகையிலும் இந்தியாவுக்கு கை கொடுக்கவில்லை.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
நேற்று ஆட்ட நேர இறுதியில், இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது,
வர்னபுரா 50 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 16 ரன்னுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
இருவரும் சேர்ந்து இந்திய பந்து வீச்சை பிரித்து மேய்ந்தனர். இவர்களின் வேகத்தைப் பார்த்த கேப்டன் கும்ப்ளே பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பந்து வீச வைத்தார்.
வர்னபுரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 163 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 5-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது சதம் ஆகும்.
மறுமுனையில் இருந்த ஜெயவர்த்தனேயும் சிறப்பாக விளையாடி அபார சதத்தைப் போட்டார். 259 பந்துகளில் 136 ரன்களைக் குவித்து விட்டு ஓய்ந்தார் ஜெயவர்த்தனே.
பின்னர் வந்த சமரவீராவும், தில்ஷனும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையின்போது சமர வீரா ஆட்டமிழக்காமல் 79 ரன்களை எடுத்திருந்தார்.
தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்களைக் குவித்திருந்தது.
இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கும்ப்ளே புதிய சாதனை:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் விதியை முதன்முறையாக பயன்படுத்திய கேப்டன் என்ற பெருமை அனில் கும்ப்ளேவுக்குக் கிடைத்துள்ளது.
கொழும்பு டெஸ்ட் போட்டியில் ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பீல்டு நடுவரின் தீர்ப்பில் உடன்பாடு இல்லாவிட்டால் 3வது நடுவரிடம் அப்பீல் செய்யலாம். இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டியில் இந்த புதிய விதி பரீட்சார்த்தமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விதியை இன்று கேப்டன் கும்ப்ளே பயன்படுத்தி அப்பீல் செய்தார்.
வர்னபுரா 86 ரன்களில் இருந்தபோது பந்து வீசிய ஹர்பஜன் சிங், எல்.பி.டபிள்யூ கேட்டார். ஆனால் நடுவர் மார்க் பென்சன் அதை நிராகரித்தார்.
இதையடுத்து கேப்டன் கும்ப்ளே அப்பீல் செய்தார். 3வது நடுவரான ரூடி கொயர்ட்சன், டிவி ரீப்ளேவைப் பார்த்து விட்டு நடுவரின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.


Click it and Unblock the Notifications