கான்பூர்: இந்தியா 288/9 - லட்சுமண் 50, கங்குலி 87

தென் ஆப்பிரிக்கா- இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை எடு்த்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. இருதரப்பு பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சால் முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பு மந்தமாகவே இருந்தது.
இந்த டெஸ்டை வென்று தொடரை டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று காலையில் இந்தியா முதல் இன்னிங்ஸை துவங்கியது. வாசிம் ஜாபரும், வீரேந்திர சேவாக்கும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய இருவருமே அடுத்தடுத்து எல்பிடபிள்யூ ஆனார்கள். இரண்டு பவுண்டரிகளை மட்டும் எடுத்த சேவாக் ஸ்டெயின் பந்துவீச்சில் அவுட்டானார்.
3 பவுண்டரிகளுடன் 15 ரன்களை எடுத்த ஜாபர் மோர்கெல் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 25/2.
3வது விக்கெட்டுக்கு திராவிட்டும், விவிஎஸ்.லட்சுமணும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 113ஐ எட்டியபோது மோர்கெல் பந்துவீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து திராவிட் அவுட்டானார். 106 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
4வது விக்கெட்டுக்கு கங்குலி ஜோடி சேர்ந்தபோது லட்சுமண் 50 ரன்களை எட்டினார். 102 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி இந்த அரைசதத்தை அடித்தார். இதையடுத்து மோர்கெல் வீசிய பந்தில் அவர் கிளீன் போல்டு ஆனார்.
மதிய உணவுக்குப் பிறகு, 5வது விக்கெட்டுக்கு கங்குலியும் யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 55 ரன்களை எடுத்தனர். இந்த நிலையில் ஹாரிஸ் பந்துவீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து யுவராஜ் அவுட்டானார். அவர் 57 பந்துகளில் 6 பவுண்டரிகளை எடுத்து 32 ரன்களை குவித்தார்.
6வது விக்கெட்டுக்கு கங்குலியுடன் கேப்டன் டோணியும் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் சேர்ந்து 60 ரன்கள் குவித்தபோது 32 ரன்கள் எடுத்து டோணி அவுட்டானார். ஹாரிஸ் பந்தை கிரிஸைவிட்டு ஏறி அடிக்க முயன்றபோது விக்கெட் கீப்பர் பௌச்சர் அவரை ஸ்டம்ப்அவுட் செய்தார். அப்போது ஸ்கோர் 248.
இதையடுத்து வந்த ஹர்பஜன் சிங் 6, பியூஷ் சாவ்லா 4 என ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக கங்குலி 87 ரன்கள் எடுத்து அவுட்டானார். 119 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து ஸ்டெயின் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் ஸ்ரீசாந்த் 9 ரன்களுடனும் இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களாக இருந்தது.
தென் ஆப்பிரிக்க வீரர்களில் ஸ்டெயின், மோர்கெல் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரிஸ் 2, நிடினி 1 விக்கெட் எடுத்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications