டெல்லி: இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததே, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அதிக அளவில் ரன் குவிக்க காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
டெல்லி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டமான நேற்று, ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் அதிரடியாக ஆடி 577 ரன்களைக் குவித்தது.
ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே பாக்கி இருப்பதால், போட்டி டிராவில் முடியும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில், இந்திய அணியின் பீல்டிங் மகா மோசம் என பயிற்சியாளர் கிர்ஸ்டன் விமர்சித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்திற்குப் பின்னர் கிர்ஸ்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது எங்களுக்கு சிறந்த நாள் அல்ல. சில நல்ல சந்தர்ப்பங்களை நாங்கள் தவற விட்டு விட்டோம். இனியும் எங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஏதாவது புதிதாக உருவானால்தான் உண்டு.
சில கேட்ச்சுகளை நாங்கள் தவற விடாமல் இருந்திருந்தால், நிச்சயம், அவர்கள் இந்த அளவுக்கு ஸ்கோர் செய்திருக்க முடியாது.
அதேபோல பந்து வீச்சும் சிறப்பாக இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர்கள் சிறப்பாகவே செய்திருக்கலாம். சரியான கோணத்தில் பந்து வீச்சு இல்லை. இதனை ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்திக் கொண்டது.
கும்ப்ளே அணியின் மிகவும் முக்கியமான உறுப்பினர், நம்பகமான பவுலர். மிகச் சிறப்பாக முயற்சித்தார். கை விரலில் 11 தையல்கள் போடப்பட்ட நிலையிலும் கூட அருமையாக பந்து வீசினார்.
அடுத்த போட்டியில் அவர் மேலும் சிறப்பாக பந்து வீசுவார் என நம்புகிறேன்.
ஷேவாக் தனது பந்து வீச்சால் என்னை அசத்தி விட்டார். ஹர்பஜன் சிங் இல்லாத நேரத்தில், அவரது இடத்தை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார் ஷேவாக்.
இப்போது போட்டி என்னாகும், என்ன முடிவு ஏற்படும் என்பதை யாராலும் உறுதியாக கூற முடியாது என்றார் கிர்ஸ்டன்.