கிர்ஸ்டனை பயிற்சியாளராக்க சீனியர் வீரர்கள் எதிர்ப்பு?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனை நியமிக்க அணியின் மூத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பயிற்சியாளர் பதவியை ஏற்பதில் அவசரம் காட்டப் போவதில்லை என்று கிர்ஸ்டன் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தலை இல்லாத அணியாக கொஞ்ச நாட்களாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் இல்லாமல் இந்திய அணி சில தொடர்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில், முக்கியமான தொடரான ஆஸ்திரேலியா தொடர் நெருங்கி வருவதால் சிறந்த பயிற்சியாளர் இருப்பது அவசியம் என்று கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சிாயளர் தேர்வை விரைவுபடுத்தியது.
இதில், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அவரும் இந்திய அணியின் பயிற்சியாளராவதில் ஆர்வமாக உள்ளார்.
இந்த நிலையில் கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க இந்திய அணியின் மூத்த வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கிர்ஸ்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பதவி ஏற்பதற்குள்ளாகவே இந்திய வீரர்களில் சிலர் தன் மீது அதிருப்தி கொண்டிருப்பது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் தனது முடிவை நிதானமாக தெரிவிக்க அவர் தீர்மானித்துள்ளார்.
இன்றைக்குள் அவர் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தன்னை பயிற்சியாளராக ஏற்பதில் மூத்த வீரர்களுக்கு தயக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்திய பின்னரே தனது முடிவைச் சொல்லப் போவதாக கிரிக்கெட் வாரியத்திடம் கிர்ஸ்டன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கிர்ஸ்டன் கூறுகையில், அணியின் மூத்த வீரர்களுக்கு என்னை ஏற்பதில் தயக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே எனது முடிவை அறிவிப்பதை தாமதப்படுத்தத் தீர்மானித்துள்ளேன் என்றார்.
இந்திய டெஸ்ட் கேப்டன் கும்ப்ளேவுக்கு கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமிப்பதில் முழு திருப்தி உள்ளது. ஆனால் அணியின் சில மூத்த வீரர்கள் (சச்சின்? டிராவிட்? கங்குலி? டோணி?) கிர்ஸ்டனின் வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது.
தற்போது உள்ள மேலாளர் லால்சந்த் ராஜ்புத், பந்து வீச்சுப் பயிற்சியாளர் வெங்கடேச பிரசாத், பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ஆகியோரே போதும், தனியாக பயிற்சியாளர் தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்களாம்.
இதற்கிடையே, மூத்த வீரர்களுடன் பேசி விட்டு தனது இறுதி முடிவை எடுக்கவும் கிர்ஸ்டன் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அவர் கும்ப்ளேவை இருமுறை சந்தித்துள்ளார். கும்ப்ளே, தனது முழு ஆதரவையும் கிர்ஸ்டனுக்குத் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டோணி, டிராவிட் ஆகியோரையும் கிர்ஸ்டன் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications