Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேவாக், கம்பீர் கலக்கல்-'மும்மூர்த்திகள்' சொதப்பல்

Shewag
காலே: கொழும்பு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இன்று காலே நகரில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. ஆனால் ஷேவாக்கும், கம்பீரும் போட்டுக் கொடுத்த வலுவான அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ள மும்மூர்த்திகளான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் தவறியதால் இந்தியா ஆட்டநேர இறுதியில் சரிவைச் சந்தித்தது

கொழும்பில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் பெரும்தோல்வியைத் தழுவியது. சுழற்பந்து வீச்சாளர்கள் முரளிதரன், மெண்டிஸ் பந்து வீச்சை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை.

இந்த நிலையில், இன்று காலே நகரில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. காலே மைதானத்தில் முதல் 2 நாட்களுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சு அபாரமாக எடுபடும் என்பதால் டாஸ் வெல்வது முக்கியம். அந்த வகையில் இந்தியாவுக்கு இன்றுஅதிர்ஷ்டம் காத்திருந்தது.

கேப்டன் கும்ப்ளே டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் கம்பீரூரும் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் டெஸ்ட்டில் சொதப்பிய வீரேந்திர ஷேவாக் இப்போட்டியில் வீறு கொண்டெழுந்தார்.

தொடக்கம் முதலே அடித்து விளையாடிய அவர் புயல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். டுவென்டி 20 ரேஞ்சுக்கு அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.

படு சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் 91 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்சரும், 14 பவுண்டரிகளும் அடக்கம். மறு முனையில் கம்பீரும் சிறப்பாக ஆடினார். ஷேவாக் அடித்து ஆட இடம் கொடுத்து, நிதானமாக ஆடிய கம்பீர் 92 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தார்.

முதல் டெஸ்ட்டில் நிலைகுலைய வைத்த முரளிதரனையும், மெண்டிஸையும், இன்று ஷேவாக் ஓட ஓட விரட்டினார். இருவரது பந்துகளையும் அனாயசமாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தார்.

உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய ஷேவாக் சதம் போட்டார்.

ஷேவாக் சதம் போட்ட சிறிதுநேரத்தில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோர் 56 ரன்களாகும்.

அதுவரை நன்றாகப் போய்க் கொண்டிருந்த இந்திய இன்னிங்ஸ், பின்னர் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் மும்மூர்த்திகளால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

முதலில் வந்த டிராவிட் 6 பந்துகளை சாப்பிட்டு 2 ரன்களை மட்டும் கொடுத்து விட்டு மெண்டிஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தார் சாதனை நாயகன் சச்சின். வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்து கலக்கப் போகிறேன் பாருங்கள் என்ற ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டார். ஆனால் அவரது துரதிர்ஷ்டமோ அல்லது ரசிகர்களின் நேரமோ தெரியவில்லை, 3 பந்துகளை மட்டும் சந்தித்து 5 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிறகு வந்து சேர்ந்தார் தாதா கங்குலி. ஆனால் ஆட்டத்தில் தாதாத்தனம் இல்லை. படு சாதாவாக ஆடிய கங்குலி முட்டையுடன் பெவிலியன் திரும்பி விட்டார்.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த இந்தியாவின் ஆட்டம் இந்த மும்மூர்த்திகளால் சட்டென்று தேங்கிப் போனது.

இருப்பினும் பின்னர் ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்த வி.வி.எஸ்.லட்சுண், மிக பொறுப்பாகவும், நிதானமாகவும் ஆடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆட்ட நேர இறுதியில்,4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.

ஷேவாக் 128 ரன்களும், லட்சுமண் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மெண்டிஸ், வாஸ் தலா2 விக்கெட்களை வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+