இந்தியா 14 ரன் லீடிங் - வழக்கம் போல சச்சின்!
கொழும்பு: கொழும்பில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதன் காரணமாக இலங்கையை விட 14 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பில் நடந்து வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. விக்கெட் கீப்பர் குமார சங்கக்காரா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 144 ரன்களைக் குவித்து விட்டுத்தான் அவர் ஓய்ந்தார். சங்கக்காராவின் அபார ஆட்டத்தால், இலங்கை இந்தியாவை விட கூடுதல் ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
3வது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின்போது 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை இலங்கை எடுத்திருந்தது.
பிரசன்னா ஜெயவர்த்தனே 44 ரன்களுடனும், தம்மிகா பிரசாத் 16 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.
மதிய உணவு இடைவேளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்வேகமாக சரிந்தது இலங்கை. இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 147 ரன்கள் அதிகமாகும்.
ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், கும்ப்ளே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா ஆடத் தொடங்கியது. ஷேவாக் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தார். வந்த பந்துகளையும் விளாசித் தள்ளிய அவருடன் இணைந்து கம்பீரும் வேகமாக ஆடினார்.
வேகம் விவேகம் அல்ல என்பதைப் போல இந்தியா வேகமாக விக்கெட்டுகளை இழக்கஆரம்பித்தது. முதலில் போனவர் கம்பீர். 26 ரன்கள் அவரது பங்கு.
அடித்து ஆடிய ஷேவாக்கும் 29 பந்துகளில் 34 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் சற்று நிதானித்து ஆடியிருந்தால் இந்தியாவுக்கு நலமாக இருந்திருக்கும்.
பின்னர் வந்த ராகுல் டிராவிட் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்க நிதானமாக ஆடினார். 88 பந்துகளை சந்தித்த அவர் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சொதப்பிய கங்குலி - சச்சின்:
மூத்த வீரர்களான கங்குலியும், சச்சினும் வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தைக் கொடுத்தனர்.
50 பந்துகளைச் சந்தித்த கங்குலி வெறும் 18 ரன்களே எடுத்தார். அவரை மெண்டிஸ் அவுட் ஆக்கினார். அதேபோல சச்சினும் 14 ரன்களோடு மெண்டிஸிடம் விக்கிட்டைக் கொடுத்து விட்டு கிளம்பினார்.
இதனால் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இந்த நிலையில், ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்திருந்தது.
டிராவிட் (46), வி.வி.எஸ்.லட்சுமண் (17) ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கையை விட இந்தியா தற்போது 14 ரன்கள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது. முக்கிய பேட்ஸ்மென்கள் விழுந்து விட்டனர். இன்னும் 2 நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications