மொஹாலி டெஸ்ட் டிரான-ஆட்ட நாயகன் கம்பீர்
மொஹாலி: மொஹாலி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா, இந்தத் தொடரை வென்றது.
மொஹாலியில் நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 453 ரன்கள் எடுத்தது. கெளதம் கம்பீர் அபாரமாக ஆடி 179 ரன்கள் குவித்தார். டிராவிட் 136 ரன்களைக் குவித்தார்.
இதையடுத்து ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 302 ரன்களில் சுருண்டது. கெவின் பீட்டர்சன் 144 ரன்கள் சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா வேகமாக ரன்களைக் குவிக்கத் தவறியதோடு, விக்கெட்களையும் வேகமாக இழந்தது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், 4 விக்கெட்களை இழந்து 134 ரன்களை எடுத்தது.
இன்று நடந்த இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பிராக்டிஸ் கொடுத்தனர்.
கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்களை விளாசினார். யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடி 93 பந்துகளில் 86 ரன்களைக் குவித்தார்.
இதையடுத்து 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது. மிக மிக மெதுவாக ஆடி வந்த இங்கிலாந்து வீரர்கள், ஆட்ட நேர இறுதியில், ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டத்தை முடித்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகனாக கம்பீர் அறிவிக்கப்பட்டார்.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. எனவே 1-0 என்ற கணக்கில் இப்போட்டித் தொடரை இந்தியா வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications