கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!
மும்பை: விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் விளையாடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்து தங்களின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கின்றன.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தோனி, சச்சின், ஹோக்லி உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் கையில் பல நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்தங்கள் கையில் உள்ளன. அதுவும் உலகக்கோப்பையை இந்தியா வென்ற பின்னர் தோனியை ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டன.
இந்த நிலை இப்போது அப்படியே மாறிவிட்டது. இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை அடுத்து அணியின் கேப்டனுக்கு சிக்கல் உருவானது. இந்திய கிரிக்கெட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கலாமா? கூடாதா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கையில் அவரது விளம்பர ஒப்பந்தங்கள் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.

விளம்பரத்தில் ஏன் வீரர்கள்
விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் குடிக்கும், சாப்பிடும், உபயோகிக்கும் பொருட்களை வாங்க பலரும் தயாராக இருக்கின்றனர். இதனாலேயே பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.

200 கோடி சம்பாதிக்கும் தோனி
இந்திய விளம்பரத் துறையில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக கிரிக்கெட் கேப்டன் தோனி திகழ்ந்து வருகிறார். பெப்சி, டிவிஎஸ், ரீபோக், ஏர்செல், டைட்டன் என பல நிறுவனங்களுடன் தோனி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம், தோனிக்கு ஆண்டுக்கு 200 கோடி வருவாய் கிடைக்கிறது.

சரியும் விளம்பர வாய்ப்பு
தொடர் தோல்விகளால் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காரசாரமான விமர்சனங்களில் தோனி சிக்கித் தவிக்கும் நிலையில், அவரது கேப்டன் பதவியே ஆட்டம் கண்டு வருவதோடு அவரது வணிக ஒப்பந்தங்களும் இப்போது ஆட்டம் கண்டுள்ளன. இதனால் அவரது விளம்பர வாய்ப்பிலும் இறங்குமுகமாக மாறியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தோனி 43 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றிய நிலையில், இப்போது அது 28 ஆக குறைந்துள்ளது.

கேப்டன் பதவி பறிபோனால்?
இது மக்களிடையே அவரது புகழ் குறைந்து வருவதைக் காட்டுவதாக விளம்பரத் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். தோனியின் கேப்டன் பதவி பறிக்கப்படும் பட்சத்தில், அவரது புகழ், மேலும் சரிந்து, தோனி என்ற பிராண்ட்-இன் மதிப்பு 25 முதல் 30 சதவீதம் வரை சரியும் என இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி எல்லாம் இல்லை
ஆனால் இதற்கு நேரெதிர் கருத்துக்களும் உள்ளன. தோனி, தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஆட வேண்டியிருப்பதால், பல ஒப்பந்தங்களை அவர் புதுப்பிக்கவில்லை என்றும், பெப்சி போன்ற பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை மட்டுமே புதுப்பித்துக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரத்துக்காக விளையாடும் சச்சின்
இதே நிலைதான் சச்சின் டென்டுல்கருக்கும். அவர் இன்னும் சில ஆண்டுகளுக்கு விளம்பரங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த ஒப்பந்தம் முடியும் வரை அவர் விளையாடியே தீருவேன் என்று விளையாடி வருகிறார். அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து எழுந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் இதே காரணம்தான் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications