அகமதாபாத்: கான்பூரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்.பி.சிங் நீக்கப்பட்டுள்ளார். கும்ப்ளே விளையாடுவதிலும் சிக்கல் நிலவுகிறது.
சென்னை டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நேற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கான்பூரில் வருகிற 11ம் தேதி தொடங்கும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை இறுதி செய்ய இன்று வெங்சர்க்கார் தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் நடந்தது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அணி விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் 16 பேர் கொண்ட அணியிலிருந்து ஆர்.பி.சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் முனாப் படேல் உள்ளே வருகிறார்.
அதேபோல மும்பை சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி வீரர்கள் குறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், அனில் கும்ப்ளே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு சில உடல் தகுதிப் பிரச்சினைகள் உள்ளன. ஏப்ரல் 10ம் தேதி அவர்களுக்கு கான்பூரில் உடல் தகுதி சோதனை நடைபெறும். அப்போது அவர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர் அணியின் எண்ணிக்கை 14 பேர் கொண்டதாக சுருக்கப்படும் என்றார்.
அணி விவரம் - அனில் கும்ப்ளே, வாசிம் ஜாபர், வீரேந்திர ஷேவாக், ராகுல் டிராவிட், வி.வி.வி.எஸ்.லட்சுமண், செளரவ் கங்குலி, யுவராஜ் சிங், முகம்மது கைப், டோணி, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், முனாப் படேல், பியூஷ் சாவ்லா, ரமேஷ் பவார், இஷாந்த் சர்மா.