உடல் திறன் சிறப்பாக உள்ளது - இப்போதைக்கு ஓய்வில்லை: சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் மும்மூர்த்திகள் என வர்ணிக்கப்படுபவர்கள் சச்சின், கங்குலி, கும்ப்ளே. இவர்களில் கும்ப்ளே டெல்லி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்று விட்டார். கங்குலி நாக்பூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
எனவே சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் வலுத்துள்ளது. ஆனால் தனது உடல் திறன் சிறப்பாக உள்ளதாகவும், தனக்கு உடல் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும், எனவே இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என சச்சின் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனது உடல் சிறப்பாக ஒத்துழைக்கிறது. நன்றாக உள்ளது. எனவே இந்த நிமிடம் வரை ஓய்வு குறித்து நான் யோசிக்கவில்லை. என்னிடம் அந்தத் திட்டமும் இல்லை.
நான் எப்போதுமே நிகழ்காலம் குறித்துதான் சிந்திப்பேன். அடுத்த நான்கு, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது குறித்தெல்லாம் சிந்திக்க மாட்டேன்.
ஓய்வு பெற வேண்டும் என நான் முடிவு செய்தால் அதை அனைவருக்கும் தெரிவிப்பேன். அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது ஓய்வு மிகப் பெரிய செய்தி என்பதை நான் அறிவேன். ஆனால் அதை எதிர்மறையான செய்தியாக நான் கருதவில்லை.
அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆடுவேனா, இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை. அடுத்த போட்டி குறித்து மட்டுமே நான் பொதுவாக சிந்திப்பது வழக்கம்.
2011 உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் 700 நாட்கள் உள்ளன. நான், தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் அடுத்த நான்கு நாட்கள் குறித்துதான் எனது பூரண கவனமும் உள்ளது.
கங்குலியை மிஸ் செய்கிறேன் ..
கங்குலி ஓய்வு பெறவுள்ளார். அது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். நிச்சயம் நான் அவரை மிஸ் செய்வேன். இருவரும் சேர்ந்து பலமுறை ஆடியுள்ளோம். எனவே கங்குலியின் ஓய்வு எனக்கு சற்று ஏமாற்றமான ஒன்றுதான் என்றார் டெண்டுல்கர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications