ஆக்லாந்து: கடைசிப் போட்டிதானே என்று ஏனோதானோ என்று ஆடிய இந்தியா, நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றியை விட்டுக் கொடுத்து தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்றுடன் முடிந்தது.
இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் இந்தியா வென்றது. ஒரு போட்டியில் மழை வென்றது. 3-0 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியாவும், ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாத பரிதாப நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் இரு அணிகளும் இன்று ஆக்லாந்தில் மோதின.
தொடரை வென்று விட்ட மிதப்பி்ல் இருந்த இந்திய வீரர்கள் இன்றைய போட்டியில் சீரியஸாகவே விளையாடியது போலத் தெரியவில்லை. மாறாக, ஆறுதல் வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் நியூசிலாந்து வீரர்கள் ஆடினர்.
இங்குதான் இந்திய வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது. தொடரை வென்று விட்டோம், கடைசிப் போட்டிதானே, பாவம் போனால் போகிறது என்று கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். கடைசி வரைக்கும் எதிரணியினரை எழுந்திருக்க விடாமல் அடித்து நொறுக்குவதே அவர்களது ஸ்டைல். அதாவது விளையாட்டாக கூட தோல்வி அடைந்து விடக் கூடாது என்ற ஸ்பிரிட் உள்ளவர்கள் ஆஸ்திரேலிய வீரரர்கள்.
ஆனால் தொடரை வென்று விட்ட குஷியில், நேற்று உற்சாகமாக கடல் விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் களித்த இந்திய வீரர்கள் இன்றைய போட்டியை எதிர்கொண்டனர்.
டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். கடந்த போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய ஷேவாக் இந்தப் போட்டியிலும் சிறப்பாகவே ஆடினார். ஆனால் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கம்பீரின் பங்கு ஜஸ்ட் 5 ரன்கள். அதற்கே அவருக்கு 16 பந்துகள் தேவைப்பட்டன.
ரோஹித் சர்மா சற்று நிதானமாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல், 74 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களைச் சேர்த்தார் ரோஹித் சர்மா.
சுரேஷ் ரெய்னா 8, யுவராஜ் சிங் 11, டோணி 9, யூசுப் பதான் முட்டை, ஹர்பஜன் சிங் 1, ஜாகிர்கான் 5, பிரவீன் குமார் 6, இஷாந்த் சர்மா 3 என சொல்லி வைத்தது போல அத்தனை பேரும் சொற்ப ரன்களி்ல் பெவிலியன் திரும்பினர்.
அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குப் போவது போல அத்தனை வீரர்களும் அதி வேகமாக அவுட் ஆகி வந்தது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தி்ல் ஆழ்த்தியது.
இறுதியில், 36.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து வீரர் ரைடர் 3 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர் ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணி படு வேகமாக ரன்களைக் குவித்தது. ரைடர் சிறப்பாக ஆடி 49 பந்துகளில் 63 ரன்களைக் குவித்தார். மெக்கல்லத்தின் பங்கு 2 ரன்களே.
பின்னர் வந்த கப்டில் 57 ரன்களும், எல்.டெய்லர் 28 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
23.2 ஓழர்களில் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து.
இந்திய பந்து வீச்சு படு மோசம். இஷாந்த் சர்மா 7.2 ஓவர்கள் வீசி 63 ரன்களை வாரிக் கொடுத்து வள்ளல் பட்டத்தைத் தட்டிச் சென்றார். ஒரு விக்கெட் இவரது பங்கு. ஜாகிர்கானோ 8 ஓவர்கள் வீசி 51 ரன்களைக் கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவி்லை. பிரவீன் குமார் தன் பங்குக்கு 4 ஓவர்களை வீசி 22 ரன்களைக் கொடுத்தார். இருந்தாலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக ரைடர் தேர்வு செய்யப்பட்டார்.